Wednesday, September 25, 2024

பூரி ஜெகநாதர் கோவிலின் ரகசிய அறை மீண்டும் திறப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

பூரி,

ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகநாதர் கோவிலின் ரகசிய அறையில் (ரத்ன பண்டார்) கோவிலுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறை கடைசியாக கடந்த 1978-ம் ஆண்டு திறக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜனதா அரசு ரத்ன பண்டாரை திறக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14-ம் தேதி ரத்ன பண்டார் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் அரசின் உயர்மட்டக்குழுவினர் ரத்ன பண்டாரை திறந்தனர். அன்றைய தினம், ரத்ன பண்டாரின் வெளிப்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைத்து தற்காலிக ரகசிய அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிலையில் ரத்ன பண்டார் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அரசின் உயர்மட்டக்குழுவினர் காலை 9.51 மணிக்கு ரத்ன பண்டாரை திறந்தனர். அதன் பின்னர் ரத்ன பண்டாரின் உட்புற அறையில் இருந்த ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக ரகசிய அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஒடிசா அரசால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக்குழுவின் தலைவரும், ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான பிஸ்வநாத் ராத் வைத்த கோரிக்கையின் பேரில் பூரி மன்னர் கஜபதி மகாராஜா திவ்ய சிங் தேப், ரத்ன பண்டாரில் இருந்து தற்காலிக ரகசிய அறைக்கு ஆபரணங்கள் மாற்றப்பட்டதை நேரில் ஆய்வு செய்தார்.

இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்று வட்டாரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும் ரத்ன பண்டாரில் பாம்புகள் இருக்கலாம் என நம்பப்படுவதால் பாம்பு பிடிப்பவர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ரத்ன பண்டாரின் உள்அறையில் இருந்து ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை மாற்றும் போது, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பாரம்பரிய உடையுடன் ரத்ன பண்டாருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக பூரி கலெக்டர் சித்தார்த் ஷங்கர் ஸ்வைன் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024