பெங்களூரு சம்பவம்: மகாலட்சுமி கொல்லப்பட்டது எப்போது?

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

பெங்களூருவை உலுக்கிய மகாலட்சுமி கொலை சம்பவத்தில், குற்றவாளியின் தற்கொலை கடிதம் வாயிலாக, அவர் எப்போது கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒடிசாவில், மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட முக்கிய குற்றவாளி முக்தி ரஞ்சய் ராய், தனது நாள்குறிப்பில், தற்கொலைக் கடிதத்தை எழுதியிருக்கும் நிலையில், அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

பெங்களூருவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு வளாகத்தில் மகாலட்சுமியும், முக்தி ரஞ்சனும் வேலை செய்து வந்துள்ளனர். மகாலட்சுமியின் குழுவுக்கு முக்திதான் குழு தலைவர். செப்டம்பர் 1ஆம் தேதிதான் மகாலட்சுமி கடைசியாக பணிக்கு வந்துள்ளார். அதே நாளிலிருந்துதான் முக்தியும் வேலைக்கு வரவில்லை. இதை வைத்துத்தான் முதற்கட்ட விசாரணைகளில் தொடங்கியிருக்கின்றன.

அதன்படி, முக்தி தனது டைரியில் எழுதியிருக்கும் தகவல் என வெளியாகியிருப்பதில், பெங்களூருவில் மகாலட்சுமி தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற முக்திரஞ்சய் ராய், திருமணம் குறித்துப் பேசியதாகவும், மகாலட்சுமியின் நடவடிக்கைகளால் தான் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருந்த நிலையில், வாக்குவாதம் கைகலப்பாக மாறி, அவரைக் கொன்றதாக அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், என் காதலி மகாலட்சுமியை செப்டம்பர் 3ஆம் தேதி கொலை செய்தேன் என்றும் அவர் எழுதியிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாலட்சுமியை கொலைசெய்து, அவரது உடலை கழிப்பறை இழுத்துச் சென்று துண்டுத்துண்டாக வெட்டி அனைத்து உடல் பாகத்தையும் குளிர்பதனப் பெட்டியில் வைத்து மூடினேன். பிறகு, ஆசிட் வைத்து கழிப்பறையை முழுக்க கழுவினேன். வீட்டையும் ஆசிட் வைத்துக் கழுவினேன், ஒருவேளை யாரேனும் திடீரென வீட்டுக்குள் வந்துவிட்டால், சந்தேகம் வரக்கூடாது என அனைத்துத் தடயங்களையும் அழித்தேன் என்றும் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, ஒடிசா மாநிலம் பத்ரக் கிராமத்தைச் சேர்ந்த முக்தி, கொலை செய்துவிட்டு சொந்த ஊருக்குச்சென்றிருக்கிறார். புதன்கிழமை தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். பிறகு அவர் மரத்தில் தூக்கிட்ட நிலையில், சடலமாகத்தான் உள்ளூர் மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண் தோழியான மகாலட்சுமியை திருமணம் செய்ய விரும்பிய முக்தி, இது தொடர்பாக தொடர்ந்து மகாலட்சுமியுடன் சண்டையிட்டு வந்த நிலையில், மகாலட்சுமி திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாததால் கொலையில் முடிந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பெங்களுருவின், மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மகாலட்சுமி கொல்லப்பட்டு, 59 துண்டுகளாக அவரது உடல் வெட்டப்பட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தேடப்பட்டு வந்த முக்தி ரஞ்சன் ராய், ஒடிசா மாநிலத்தில் தனது சொந்த கிராமத்தில், மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 நாள்களாக, மகாலட்சுமியின் உடல் துண்டுகள் குளிர்பதனப் பெட்டியில் இருந்தாலும், புழுக்கள் உருவாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது. மகாலட்சுமி, அந்த குடியிருப்பில் யாருடனும் பேசும் பழக்கம் இல்லாததால், அவர் வீட்டில் இல்லாததை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும், சிறிது காலம் அவருடன் சகோதரர் தங்கியிருந்ததாகவும் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

மகாலட்சுமியின் கணவரிடம் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு திருமணமாகி, குழந்தை இருப்பதாகவும், ஆனால், கணவர் மற்றும் குழந்தையிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்வதற்கு, முன்பு முக்தி எழுதிய தற்கொலைக் குறிப்பு காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில், முக்தி, மகாலட்சுமியை கொல்வதற்கு முன்பு, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவித்திருப்பதாக வெளியாகும் தகவலில், நான் செய்தேன் என்று கடிதம் தொடங்குகிறதாம். மேலும், மகாலட்சுமியின் அரக்க குணம் மற்றும் கடுமையாக சண்டையிடும் குணங்களால், தான் மிகுந்த சலிப்படைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

திருமணம் தொடர்பான வாக்குவாதத்தில், மகாலட்சுமி என்னை தாக்கினார், என்னை கோபத்துடன் கத்தினார். இதனால், நான் அவரைத் தாக்கிக் கொன்றேன், அவரது உடல்களை பல துண்டுகளாக வெட்டினேன் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், பத்ரக் காவல்துறையினர், அந்த தற்கொலை கடிதம் முக்தி எழுதியதுதானா என்று கையெழுத்தினை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

மகாலட்சுமியின் உடல் பாகம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், முக்தி, பணிக்கு வராமல் தலைமறைவானதும், மகாலட்சுமியும் முக்தியும் நெருங்கிப் பழகி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததே, அவர்தான் குற்றவாளி என்று காவல்துறையினர் சந்தேகம் கொள்ள காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024