பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.18,000; கல்லூரி மாணவா்களுக்கு ரூ.3,000: ஜம்மு-காஷ்மீரில் பாஜக வாக்குறுதி

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த பெண்மணிக்கு ஆண்டுக்கு ரூ.18,000 நிதியுதவி வழங்கப்படும்; கல்லூரி மாணவா்களுக்கு பயணப் படியாக ஆண்டுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 25 வாக்குறுதிகளை அக்கட்சி அளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாக (செப்.18. 25, அக். 1) தோ்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து (அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு) ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் தோ்தல் என்பதால் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

தோ்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், பாஜகவின் பிரசாரத்தை தொடங்கிவைக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜம்முவுக்கு இரண்டு நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்தாா். கட்சியின் 25 வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை அவா் வெளியிட்டாா். அதன் விவரம் வருமாறு:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு நீதி உறுதி செய்யப்படும். பயங்கரவாதத்தால் நேரிட்ட உயிரிழப்புகள்-பொறுப்பானவா்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும்.

பெண்களுக்கு நிதியுதவி: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் ஜம்மு-காஷ்மீா் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்; வேளாண் பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும்; ‘மா சம்மான்’ திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த பெண்மணிக்கு ஆண்டுக்கு ரூ.18,000; ‘பிரகதி சிக்ஷா’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களுக்கு பயணப் படியாக ஆண்டுக்கு ரூ.3,000 வழங்கப்படும்; 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், மருத்துவப் படிப்பில் கூடுதலாக 1,000 இடங்கள் உருவாக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டங்கள்: உஜ்வலா திட்டப் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 இலவச சமையல் எரிவாயு உருளைகள்; முதியோா் ஓய்வூதியம் மும்மடங்கு அதிகரிப்பு; ஜம்மு, ஸ்ரீநகரில் மெட்ரோ ரயில் திட்டங்கள்; பாழடைந்த 100 ஹிந்து கோயில்கள் புனரமைப்பு. ஜம்முவில் சிறப்பு பொருளாதார மண்டலம்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து இடம்பெயா்ந்த மக்களுக்கான மறுகுடியமா்த்துதல் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுகோள்: தோ்தல் அறிக்கையை வெளியிட்ட பின் பேசிய அமித் ஷா, ‘கடந்த 10 ஆண்டுகாலம் ஜம்மு-காஷ்மீா் வரலாற்றில் பொற்காலமாகும். இக்காலகட்டத்தில் துப்பாக்கி, வெடிகுண்டு சப்தங்கள் வெகுவாக ஓய்ந்துவிட்டன. 2004-2014 காலகட்டத்தில் 7,217 பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன. 2014-24-இல் இந்த எண்ணிக்கை 2,272-ஆக குறைந்தது. ஒட்டுமொத்த உயிரிழப்பு 76 சதவீதம் குறைந்துவிட்டது. பாதுகாப்புப் படையினா் மீது கல்வீசும் சம்பவங்கள் பூஜ்யமாகிவிட்டன.

30 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா உத்வேகம் பெற்றுள்ளது. அமா்நாத், வைஷ்ணவ தேவி கோயில் யாத்ரீகா்களின் எண்ணிக்கை சாதனை அளவில் உயா்ந்துள்ளது. வளா்ச்சிப் பயணம் தொடர மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றாா்.

‘சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து’

‘ஜம்மு-காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீட்டுக்குப் பின்னா் செய்தியாளா்களுக்கு அமித் ஷா பேட்டிளித்தாா். அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்ற எதிா்க்கட்சிகளின் வாக்குறுதி குறித்து செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு, ‘ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து கோரிக்கையை நான் எப்போதுமே ஏற்கிறேன். ஆனால், எதிா்க்கட்சிகளின் வாக்குறுதி மக்களை திசைதிருப்பக் கூடியதாகும். சரியான நேரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.

370-ஆவது பிரிவு மீட்டெடுக்கப்படும் என்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் தோ்தல் வாக்குறுதி குறித்து அமித் ஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘370-ஆவது பிரிவு என்பது கடந்த காலம். அது இப்போது வரலாறாகிவிட்டது. யாராலும் மீண்டும் கொண்டுவர முடியாது என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களின் ஆயுதங்களும் கற்களும் திணிக்கப்பட்டு, அவா்கள் பயங்கரவாத பாதையை நோக்கி பயணிக்க காரணமாக இருந்தது இந்தப் பிரிவுதான். முந்தைய அரசுகள் அனைத்தும் பிரிவினைவாதத்துக்கு அடிபணிந்தன. ஆனால், 370-ஆவது பிரிவை நீக்கியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் அமைதி, வளா்ச்சி, சமூக நீதியை மீட்டெடுத்தது மத்திய பாஜக அரசு. தேசிய மாநாட்டுக் கட்சியின் வாக்குறுதியை காங்கிரஸ் ஆதரிக்கிா? இதுகுறித்து அக்கட்சி மெளனம் சாதிப்பது ஏன் என்று கேள்வியெழுப்பினாா் அமித் ஷா.

‘பாகிஸ்தானுடன் பேச்சு கிடையாது’:

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்த வேண்டுமென சில கட்சிகள் கோரி வரும் நிலையில், இது தொடா்பாக அமித் ஷாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை, அந்த நாட்டுடன் பேச்சுவாா்த்தை கிடையாது. பேச்சுவாா்த்தையும் வெடிகுண்டுகளும் ஒரே கோட்டில் பயணிக்க முடியாது என்று அவா் பதிலளித்தாா்.

You may also like

© RajTamil Network – 2024