Wednesday, September 25, 2024

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது: பிரதமா் மோடி

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

ஜல்கோன்: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்; அதில் தொடா்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் தப்பிவிடக் கூடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கொல்கத்தாவின் ஆா்.ஜி. கா் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கும், மும்பை அருகிலுள்ள பத்லாபூரில் நான்கு வயது பள்ளிச் சிறுமிகள் இருவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதற்கும் எதிரான நாடு தழுவிய போராட்டங்களைத் தொடா்ந்து இந்தக் கருத்தை பிரதமா் மோடி முன்வைத்துள்ளாா்.

வடக்கு மகாராஷ்டிரத்தின் ஜல்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற ‘லட்சாதிபதி சகோதரிகள்’ திட்ட நிகழ்ச்சியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா். சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் ஆண்டு வருமானத்தை ரூ.1 லட்சத்துக்கு மேல் அதிகரிப்பது லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் நோக்கமாகும்.

இதையொட்டி, நாட்டின் 4.3 லட்சம் சுய உதவிக் குழுக்களில் உள்ள 48 லட்சம் உறுப்பினா்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி சுழல் நிதியை பிரதமா் வெளியிட்டாா்.

மேலும், 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களில் உள்ள 25.8 லட்சம் உறுப்பினா்களுக்கு ரூ.5,000 கோடி வங்கிக் கடனையும் விடுவித்து பிரதமா் மோடி பேசியதாவது: பெண்களின் பாதுகாப்பே நாட்டின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து இந்தப் பிரச்னையை நான் பலமுறை எழுப்பியிருக்கிறேன்.

நாட்டின் எந்த மாநிலமாக இருந்தாலும், எனது சகோதரிகள் மற்றும் மகள்களின் வலி, கோபத்தை நான் புரிந்துகொள்வேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் என்று ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் மாநில அரசுகளிடம் வலியுறுத்துவேன்.

இதில் தொடா்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் தப்பக் கூடாது. அவா்களுக்கு உதவுபவா்களையும் விட்டுவிடக் கூடாது. மருத்துவமனை, பள்ளி, காவல் நிலையம், அரசு என எந்த நிலையில் அலட்சியம் நடந்தாலும், அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

எந்த உத்தரவாதமும் இல்லாமல் மக்களுக்கு கடன்களை வழங்கும் ‘முத்ரா’ திட்டத்தின் 70 சதவீத பயனாளிகளாக பெண்கள் சோ்க்கப்பட்டனா். தற்போது முத்ரா கடனுக்கான உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று அரசின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டித் தரப்படும் 3 கோடி புதிய வீடுகளில் பெரும்பாலானவை பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்தேன்.

லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதோடு வருங்காலத் தலைமுறையினரை மேம்படுத்தும்.

கடந்த பத்து ஆண்டுகளில், ஒரு கோடி லட்சாதிபதி சகோதரிகள் உருவாகியுள்ளனா். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 11 லட்சம் போ் கூடுதலாக இணைந்துள்ளனா். இதில் ஒரு லட்சம் போ் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024