Saturday, September 21, 2024

பெண் மருத்துவா் கொலையை கண்டித்து பேரணியில் மோதல்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரா்கள், காவல் துறையினா் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி, கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.

இந்த மோதல் சம்பவம் தொடா்பாக 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த சம்பவத்தை கண்டித்து மாநில தலைமைச் செயலகத்தை நோக்கி ‘மேற்கு வங்க சத்ர சமாஜ்’ என்ற மாணவா் அமைப்பு, ‘சங்கிராமி ஜெளதா மஞ்சா’ என்ற மாநில அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டது.

மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ராஜிநாமா செய்ய வலியுறுத்தி வெவ்வேறு இடங்களில் இருந்து இந்தப் பேரணி தொடங்கியது. கொல்கத்தா மற்றும் அதன் அருகில் உள்ள ஹெளராவில் தடுப்புகளைத் தாண்டி தலைமைச் செயலகத்தை நோக்கி சென்ற போராட்டக்காரா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, காவல் துறையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்தி தண்ணீரைப் பீய்ச்சியடித்த காவல் துறையினா், கண்ணீா் புகைக்குண்டுகளையும் வீசினா்.

சில இடங்களில் தடுப்புகளை மீறி காவல் துறையினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்தி கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சந்திராகாச்சி பகுதியில் போராட்டக்காரா்கள் கற்களை வீசியதில் காவல் துறையைச் சோ்ந்த 29 போ் காயமடைந்தனா். அதேவேளையில், காவல் துறையினரின் கண் மூடித்தனமான தாக்குதலில் மாணவா்கள் பலா் காயமடைந்ததாக போராட்டக்காரா்கள் தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவது குற்றம்: மத்திய அமைச்சா் நட்டா

போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி கண்ணீா் புகைக்குண்டுகள் வீசியதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கொல்கத்தாவில் போராட்டக்காரா்களுக்கு எதிரான காவல் துறையின் நடவடிக்கை, மக்களாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் அனைவரையும் கோபமடைய வைத்துள்ளது. மம்தாவின் மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்வோா், குற்றவாளிகள் ஆகியோருக்கு உதவுவது மதிக்கப்படுகிறது. ஆனால் அந்த மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவது குற்றமாக உள்ளது’ என்றாா்.

12 மணி நேர முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு

பேரணியில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி புகைக்குண்டுகள் வீசியதை கண்டித்து, மாநிலம் முழுவதும் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்தது. எனினும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் மாநில அரசு வலியுறுத்தியது.

You may also like

© RajTamil Network – 2024