Friday, September 20, 2024

பெரும்பான்மை இந்துக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்துள்ளனர் – திருமாவளவன்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

தேர்தல் முடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக பாதுகாத்துள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மக்களவைக்கான பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட சங்பரிவார் கும்பலுக்கும் சரியான பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளது. தேர்தல் முடிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தற்காலிகமாகப் பாதுகாத்துள்ளது.

இத்தேர்தல், "சனாதன – கார்ப்பரேட்" கொள்ளைக் கும்பலுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய ஒரு மாபெரும் அறப்போரே ஆகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 'இந்தியா கூட்டணி' கட்சிகள் யாவும் சுட்டிக்காட்டின. காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 99 இடங்கள் உள்ளிட்ட 234 இடங்களில் 'இந்தியா கூட்டணி' பெற்றுள்ள வெற்றி இந்திய மக்களுக்கான மாபெரும் வெற்றியே ஆகும் .

பா.ஜ.க.வுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிட்டவில்லை. மாறாக, கடந்த தேர்தலைவிட தற்போது 63 இடங்களை அக்கட்சி இழந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் கடுமையான பேர நெருக்கடிகளுடன் கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது.

இந்தியர்களை 'இந்து சமூகத்தினர்' என்றும், 'இந்து அல்லாத பிற மதத்தினர்' என்றும் பாகுபடுத்தித் தொடர்ந்து அரசியல் ஆதாயம் காணும் பா.ஜ.க.வினரின் சதி அரசியல் முயற்சிகளை முறியடித்துள்ளனர். குழந்தை ராமருக்கு கோவிலைக் கட்டிக் கொண்டாட்டம் நடத்திய உத்தரபிரதேச மண்ணிலேயே பா.ஜ.க.வுக்கு மக்கள் படுதோல்வியைப் பரிசாக அளித்துள்ளனர். அதாவது, பெரும்பான்மை இந்துச் சமூகமே பா.ஜ.க.வைப் புறக்கணித்துள்ளது என்பதுதான் இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் இயல்பான உண்மையாகும்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024