Saturday, September 21, 2024

பேரவைக்குள் குட்கா விவகாரம்: ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

பேரவைக்குள் குட்கா விவகாரம்: ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீஸுக்கு, உரிமைக் குழுவிடம் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து முன்கூட்டியே வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, அந்த உரிமை மீறல் நோட்டீஸ் ஒரு முடிவை எட்ட வேண்டும். முந்தைய பேரவையின் பதவிக் காலம் முடிந்து விட்டதால் உரிமை மீறல் பிரச்சினை காலாவதியாகி விட்டதாக திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது.

உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து கடந்த 2021 பிப்ரவரி மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த உரிமை மீறல் நோட்டீஸுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏ-க்கள், உரிமைக் குழுவிடம் தகுந்த விளக்கமளிக்க வேண்டும். சட்டப்பேரவை உரிமைக் குழு உரிய விதிகளை பின்பற்றி, விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024