பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை காரணமின்றி நிறுத்தி வைக்கும் ஆளுநர்: தில்லி கூட்டத்தில் அப்பாவு குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களை காரணமின்றி ஆளுநர் நிறுத்தி வைப்பதாக தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு குற்றம்சாட்டினார்.

பத்தாவது காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிராந்தியத்தின் 2-ஆவது கூட்டம் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. அனைத்து மாநில சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த இரு நாள் கூட்டத்தில் அப்பாவு பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒரு மித்த ஆதரவுடன் தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களை எந்தக் காரணமும் கூறிப்பிடாமல் ஆளுநர் நிறுத்திவைத்தார். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்ற பிறகே பேரவையில் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.

ஆளுநர் அந்த மசோதாக்களுக்கு(பல்கலைக்கழகம் தொடர்பான) ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பினார். குடியரசுத் தலைவரும் இந்த மசோதாக்களில் பலவற்றுக்கு எந்த காரணமும் கூறாமல் ஒப்புதல் அளிக்கவில்லை. இவ்வாறு மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்படுவதன் மூலம் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

நீட் தேர்வு மசோதா ஆளுநர்-குடியரசுத் தலைவர் அலுவலங்களுக்கிடையே இழுத்தடிக்கப்பட்டு தமிழக மாணவர்களுக்கு சவாலாக உள்ளது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும். தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக தவறாகக் கருதி மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் முடிவுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுவதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்றார் அப்பாவு.

இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை முதன்மைச் செயலர் டாக்டர் கே.ஸ்ரீனிவாசனும் கலந்து கொண்டார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024