பொதுக் கணக்கு குழு முன் ஆஜராகாத செபி தலைவர்! ஏன்?

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு அமர்வின் முன், செபி தலைவர் மாதவி புச் இன்று ஆஜராக இயலவில்லை எனத் தெரிவித்ததால், கூட்டத்தை ஒத்திவைத்ததாக அக்குழுவின் தலைவர் கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

செபி தலைவர் மாதவி புச் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், அவரை நேரில் ஆஜராக பொதுக் கணக்கு குழு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், இன்று காலை பொதுக் கணக்கு குழு முன் செபி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை.

இதுகுறித்து அக்குழுவின் தலைவர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“இன்று காலை 9.30 மணிக்கு செபி தலைவரால் தனிப்பட்ட காரணத்தால் தில்லிக்கு பயணிக்க முடியவில்லை என்ற தகவல் கிடைத்தது. மற்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்க முடியாததை தெரிவித்தனர்.

ஒரு பெண்ணின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மற்றொரு நாளுக்கு இந்த அமர்வை மாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

பாஜக குற்றச்சாட்டு

பொதுக் கணக்கு குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வேணுகோபால் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக பாஜக எம்பியும் அக்குழுவின் உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சிஏஜி அறிக்கையை விவாதிப்பதே பொதுக் கணக்கு குழுவின் வேலை. சிஏஜி அறிக்கையில் செபி பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், தாமாக முன்வந்து தன்னிச்சையாக சில விஷயங்களை செய்கிறார், எங்களை பேசவிடாமல், எழுந்து சென்றுவிட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வேணுகோபாலுக்கு எதிராக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர்.

பாஜக எம்.பி. கடிதம்

சட்டத்துக்கு புறம்பாக கே.சி.வேணுகோபால் செயல்படுவதாக ஏற்கெனவே, பாஜக எம்.பி.யும் பொதுக் கணக்கு குழுவின் உறுப்பினருமான நிஷிகாந்த் துபே ஓம் பிர்லாவுக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், “ ‘உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பயணத்தில் உள்ள இந்தியாவின் வளா்ச்சியை பல்வேறு நாடுகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, செபி போன்ற முக்கிய அமைப்புகள் மீது ஊழல் முத்திரையை குத்தி, நாட்டின் நிதி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் அவா்களின் சதித்திட்டத்தின் ஓா் அங்கமாக செயல்படுகிறாா் கே.சி.வேணுகோபால்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க : மோசமான பணிக் கலாசாரம்: மாதவிக்கு எதிராக செபி ஊழியர்கள் புகார்!

மாதவி புச் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபி தலைவர் மாதவி மற்றும் அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தார் என்று ஹிண்டன்பர்க் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றச்சாட்டு எழுப்பியது.

இந்த குற்றச்சாட்டை மாதவி புச் மற்றும் அவரது கணவர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியரான மாதவி, செபியில் இணைந்த பிறகும் அந்த வங்கியிடம் வங்கியிடம் இருந்து ரூ.16.8 கோடி வரை ஊதியமாக பெற்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு எழுப்பியது.

மேலும், அகோரா அட்வைஸ்சரி மற்றும் அகோரா பார்ட்னர்கள் என்ற இரு நிறுவனங்களில் 99 சதவிகிதம் பங்குகளை மாதவி புச் வைத்துள்ளதாகவும், செபி உறுப்பினராக சேர்ந்த பிறகும் வருமானம் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இரண்டாவது முறையாக விளக்கம் அளித்த புச் தம்பதிகள், செபி தலைவரான பிறகு அகோரா அட்வைஸ்சரி மற்றும் அகோரா பார்ட்னர்கள் ஆகிய நிறுவனங்களின் கோப்புகளை ஒருபோதும் கையாண்டதில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும், ஐசிஐசிஐ வங்கியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், அதற்கான ஓய்வூதிய பலன்களை மட்டுமே பெற்றதாகவும் அறிக்கை மூலம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024