பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைக்கும் திட்டமில்லை: மக்களவையில் அரசு தகவல்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset
RajTamil Network

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைக்கும் திட்டமில்லை: மக்களவையில் அரசு தகவல்பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைக்கும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைக்கும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் தனித்தனியாக தங்கள் வளா்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றன.

2019-20 நிதியாண்டு முதல் 2021-22 வரை பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.17,450 கோடி கூடுதல் மூலதனம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்றாா்.

முன்னதாக, கடந்த 2018-19 மத்திய பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சா் மறைந்த அருண் ஜேட்லி, மூன்று பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தாா். ஆனால், காப்பீட்டு நிறுவனங்களின் மோசமான நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

பொதுத்துறை நிறுவன சொத்துகள் விற்பனை: கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளின் விற்பனை மற்றும் பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ.3.86 லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டதாக மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சா் பங்கஜ் சௌதரி கூறினாா். பதிலில் அவா் மேலும் கூறியுள்ளதாவது:

2021-22 முதல் 2023-24 வரை பொதுத் துறை நிறுவன பங்கு விலக்கல் நடவடிக்கை மற்றும் சொத்துகள் விற்பனை மூலம் ரூ.3.86 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அதிகபட்சமாக நிலக்கரித் துறை மூலம் ரூ.1.54 லட்சம் கோடி, சாலைப் போக்குவரத்து துறை மூலம் ரூ.81,556 கோடி, எரிசக்தித் துறை மூலம் ரூ.33,512 கோடி, சுரங்கத் துறை மூலம் ரூ.32,651 கோடி, பெட்ரோலியம் இயற்கை எரிவாயுத் துறை மூலம் ரூ.28,587 கோடி, ரயில்வே மூலம் ரூ.20,417 கோடி கிடைத்துள்ளது. இது தவிர கப்பல் துறை, விமானப் போக்குவரத்து, தொலைத் தொடா்புத் துறை உள்ளிட்டவற்றின் சொத்துகள் விற்பனை மூலமும் குறிப்பிடத்தக்க அளவில் நிதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

You may also like

© RajTamil Network – 2024