பொன்.மாணிக்கவேல் முன்ஜாமீன் கேட்டு மனு: ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

மதுரை,

நெல்லை மாவட்டத்தில் இருந்த பழமையான சிலைகள் விற்கப்பட்ட சம்பவத்தில் போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைதானார். தன்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்ததாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து விசாரிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் பொன்.மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பொன்.மாணிக்கவேல், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதேபோல காதர் பாட்சா சார்பில் தாக்கலான இடையீட்டு மனுவில், பொன்.மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

சி.பி.ஐ. சார்பில் மூத்த வக்கீல் ஆஜராகி, வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்பட்ட வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. மனுதாரர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என தெரிவித்தார். பின்னர் மூடி முத்திரையிட்ட அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. பொன்.. மாணிக்கவேல் தரப்பில், இது பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதன்படி பொன்.மாணிக்கவேல் முன்ஜாமீன் கேட்டு மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024