Tuesday, September 24, 2024

பொறியியல் கல்லூரிகளில் கணினி படிப்புகளுக்கு கூடுதலாக 22,000 இடங்கள்!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

பொறியியல் கல்லூரிகளில் கணினி படிப்புகளுக்கு கூடுதலாக 22,000 இடங்கள்!சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகளில் இடங்கள் குறைப்பு.கோப்புப்படம்Center-Center-Chennai

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கணினி தொடர்பான படிப்புகளுக்கு 2024-25 கல்வியாண்டில் கூடுதலாக 22 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், பொறியியல் கல்லூரிகளில் கடந்தாண்டு 2.1 லட்சமாக இருந்த மொத்த இடங்கள், இந்தாண்டு 2.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவிலான மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது.

ஆனால், சிவில் மற்றும் மெக்கானிக்கல் போன்ற துறைகளில் இந்தாண்டு 3,000 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஒரு கல்லூரியில் துறைக்கு அதிகபட்சமாக 240 மாணவர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

இந்நிலையில், வருகின்ற கல்வியாண்டு முதல் இந்த கட்டுப்பாட்டை ஏஐசிடிஇ நீக்கியுள்ளதால், மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டும் பல்வேறு துறைகளில் இடங்களை கல்லூரிகள் அதிகரித்துள்ளன.

கணினி தொடர்பான துறைகளில் மட்டும் இந்தாண்டு 22,248 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 1,19,229 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய துறைகளில் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது நல்ல விஷயமாக கருதப்படுகிறது. இந்த துறைகளில் மட்டும் புதிதாக 1,147 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்த இடங்களின் எண்ணிக்கை 53,940 ஆக உயர்ந்துள்ளது.

சிவில் மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் 2,965 இடங்களும், கட்டிடக்கலை துறையில் 390 இடங்களும் குறைக்கப்பட்டு இந்தாண்டு முறையே 57,467 மற்றும் 1,740 இடங்களாக உள்ளன.

மேலும், இந்த கல்வியாண்டில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவதற்கு 476 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், கல்லூரிகளின் கட்டமைப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த கல்வியாண்டு முதல் எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூட்டர், இளங்கலை வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளை தொடங்க கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

கல்லூரிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க தொழில்துறை வல்லுநர்களை பயன்படுத்தவும் பல கல்லூரிகள் திட்டமிட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024