பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. 2024-25-ம் கல்வியாண்டு பொறியியல்படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியான 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று, அரசு பள்ளிகளை சேர்ந்த சிறப்பு பிரிவு மாணவர்கள் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் விருப்ப கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்ய கால அவகாசம் வழங்கப்படுகிறது. இன்று இரவு 9 மணிக்கு, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையும், நாளை மாலை 5 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீடு ஆணையையும் உறுதி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இறுதி ஒதுக்கீடு ஆணை அன்றைய தினம் இரவு 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து, வருகிற 25-ந்தேதி முதல் 28-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.

You may also like

© RajTamil Network – 2024