‘போராட்டத்தை கைவிடுங்கள்..’ – டாக்டர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு வேண்டுகோள்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

புதுடெல்லி,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு டாக்டர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பர்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பயிற்சி டாக்டர் படுகொலை வழக்கில் விசாரணை நிலையை விரிவான அறிக்கையாக சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த அறிக்கையை வரும் வியாழக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும் இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த டாக்டர்களின் பிரச்சினை என குறிப்பிட்ட நீதிபதிகள், பயிற்சி டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர் குறித்து பேசிய நீதிபதிகள், "தயவு செய்து எங்களை நம்புங்கள், போராட்டத்தை கைவிடுங்கள். டாக்டர்களின் பாதுகாப்பு தேசிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். எனவேதான் இந்த விவகாரத்தை நாங்கள் ஐகோர்ட்டிடம் விடவில்லை. உங்கள் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024