‘போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் நான் அச்சுறுத்தவில்லை’ – மம்தா பானர்ஜி

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் கடந்த 9-ந்தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை கொல்கத்தா காவல்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதே சமயம், பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட சத்ர சமாஜ் என்ற மாணவர் அமைப்பினர், நேற்று முன்தினம் நபன்னா அபியான் என்ற பெயரில் அரசை கண்டித்து தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அப்போது நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசப்பட்டன.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பாதுகாப்பு படையினர் அவர்களை கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காளத்தில் 12 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பா.ஜ.க. நேற்று அழைப்பு விடுத்தது.

இந்த போராட்டத்தின்போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. போராட்டத்தில் பங்கேற்ற 1,350 பா.ஜ.க. ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 210 பேர் காயமடைந்ததாகவும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து எஸ்பிளனேட் பகுதியில் பா.ஜ.க.வினர் 7 நாட்கள் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கோ, அவர்களின் இயக்கங்களுக்கோ எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர்களின் போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அவர்களின் நோக்கம் உண்மையானது. சிலர் என்னை குற்றம் சாட்டுவது போல் நான் அவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது."

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024