போலி பத்திர பதிவுகளை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும் சட்டப்பிரிவு சட்டவிரோதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

போலி பத்திர பதிவுகளை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும் சட்டப்பிரிவு சட்டவிரோதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போலி பத்திரப்பதிவுகளை மாவட்ட பதிவாளரே ரத்து செய்யும்வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு 77-ஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் போலியாகவும், முறைகேடாகவும் பதியப்படும் பத்திரப் பதிவுகள் குறித்து புகார்செய்தால் அதை விசாரித்து குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரமிருந்தால் அவற்றை மாவட்டப் பதிவாளரே ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கி தமிழக அரசு பத்திரப்பதிவு சட்டத்தில் 77-ஏ என்ற பிரிவையும், மாவட்டப் பதிவாளரின் ரத்து முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 77-பி என்ற பிரிவையும் சேர்த்து கடந்த 2022-ம் ஆண்டு சட்டதிருத்தம் கொண்டு வந்தது.

இந்த சட்டதிருத்தத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும்ஆயிரக்கணக்கான பத்திரப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர்கள் ரத்து செய்தனர். இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 77-ஏ ஐ எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜோதி, ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், ராஜா கலிபுல்லா, ஆர்.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டதாவது:

தமிழக அரசின் இந்தசட்டப்பிரிவு 77-ஏ சட்டவிரோதமானது. இது நீதிமன்றத்தின் அதிகாரத்தையே பறித்து மாவட்டப் பதிவாளர்களின் கையில் கொடுப்பது போல் உள்ளது. ஒரு பத்திரம் போலியானது, மோசடியானது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது. இருதரப்பிலும் ஆதாரப்பூர்வமாக விரிவான விசாரணை நடத்தி,அந்தப் பத்திரப்பதிவு செல்லுமா,செல்லாதா என்பதை சட்டப்பூர்வமாக முடிவு செய்ய நீதிமன்றம் உள்ளது.

இந்தசட்டப்பிரிவால் மாவட்டப் பதிவாளர்கள் தன்னிச்சையாக செயல்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி பத்திரப்பதிவுத் துறையில் அதிகப்படியான லஞ்சலாவண்யத்துக்கும் வழிவகுத்துள்ளது. இதனால் நேர்மையான முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்வோருக்கும் தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தசட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வாதிட்டனர்.

சட்ட திருத்தம்: இதற்கு அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் சுமையைக் குறைக்கும் விதமாகவே இவ்வாறு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்த தீர்ப்பு விவரம் வருமாறு: பத்திரப்பதிவு சட்டத்தில் பத்திரங்களை ரத்து செய்யும் வகையி்ல் மாவட்டப் பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி கொண்டு வரப்பட்டுள்ள சட்டப்பிரிவு 77-ஏ அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்கிறோம். அந்த சட்டப்பிரிவின் கீழ் மாவட்டப் பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024