Saturday, September 21, 2024

போலி ரூபாய் நோட்டு கட்டுகள்..? மீண்டும் சமூக வலைதளங்களில் வலம் வரும் தகவல்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

சென்னை:

சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரப்படும் தகவல்கள் உண்மைதானா? என்பதை சிலர் சரிபார்க்காமல் அப்படியே நம்புவதுடன், தனது நட்பு வட்டாரங்களுக்கு பகிர்வது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக பலமுறை பார்வர்டு செய்யப்பட்ட தகவல்களை குரூப்பில் ஷேர் செய்து மற்றவர்களையும் குழப்புகிறார்கள். அவ்வகையில், வங்கி ரூபாய் நோட்டு கட்டுகள் தொடர்பான பழைய வீடியோ மற்றும் தகவல் மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கிறது.

அந்த வீடியோவில், இரண்டு நபர்கள், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் கொண்ட ஒரு பண்டலை பிரிக்கிறார்கள். அதில், ஓரங்களில் உள்ள இரண்டு பண்டல்களிலும் உள்ள தலா ஒரு நோட்டு தவிர, உள்ளே இருக்கும் அனைத்து நோட்டுகளும் வெள்ளை பேப்பர்களாக இருந்தன. ரூபாய் நோட்டு கட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பெயரிலான சிலிப் இருந்தது.

வங்கியில் இருந்து மொத்தமாக பணம் எடுத்தபோது போலி ரூபாய் நோட்டு பண்டலை கொடுத்து பெரிய மோசடி நடைபெறுகிறது என, இந்த வீடியோவை பகிர்ந்த நபர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வங்கியில் இருந்து பெறக்கூடிய பண்டல் நோட்டுகளை அவர்களிடமே பிரிக்கச் சொல்லி சரிபார்த்து வாங்கவேண்டும், பணம் வாங்கும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கி உள்ளனர்.

இந்த வீடியோ கடந்த ஏப்ரல் மாதமும் வலைத்தளங்களில் பரவி வைரலானது. அப்போது உடனடியாக விளக்கம் அளித்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, தங்களின் லோகோ மற்றும் பெயரை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் இந்த வீடியோவை உருவாக்கியிருப்பதாக கூறியிருந்தது. அந்த வீடியோவை தங்கள் லோகோவுடன் பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024