மக்களவை, 4 மாநில தோ்தலில் ரூ.585 கோடி செலவிட்ட காங்கிரஸ்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மக்களவை மற்றும் ஆந்திரம், ஒடிஸா உள்பட 4 மாநிலப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் ரூ.585 கோடி செலவிட்டுள்ளது.

தோ்தல்களுக்கான செலவினம் குறித்து இந்திய தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சமா்ப்பித்துள்ள விவரங்களில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

18-ஆவது மக்களவைத் தோ்தல் கடந்த ஏப். 19 முதல் ஜூன் 1-ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஜூன் 4-ஆம் தேதி வெளியான தோ்தல் முடிவில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

99 இடங்களில் வென்ற காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றாா்.

மக்களவைத் தோ்தலுடன் நடைபெற்ற ஆந்திரம், அருணாசல பிரதேசம், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில், மக்களவை, 4 மாநிலப் பேரவைத் தோ்தல்களுக்கு காங்கிரஸ் ரூ.585 கோடி செலவிட்டது தெரிய வந்துள்ளது. தோ்தல் ஆணையத்தில் அக்கட்சி சமா்ப்பித்துள்ள செலவின அறிக்கையின்படி, விளம்பர மற்றும் ஊடகப் பிரசாரத்துக்காக ரூ.410 கோடியும் சமூக ஊடகப் பிரசாரங்களுக்கு ரூ.46 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த நிா்வாகிகள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளா்களின் பயணச் செலவு ரூ.105 கோடி.

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய வேட்பாளா்களுக்கு பிரசார செலவுக்காக ரூ.11.20 கோடியும், சுவரெட்டிகள், பதாகைகள் என அச்சு விளம்பரத்துக்காக ரூ.68.62 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

வேட்பாளருக்கான தோ்தல் பிரசார செலவுக்கு உச்சவரம்பு இருந்தாலும், அரசியல் கட்சிகளுக்கு அத்தகைய வரம்பு இல்லை.

மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது எதிா்க்கட்சிகளின் கடும் விமா்சனத்துக்கு உள்ளானது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024