மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பு விருது அறிவித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக ஐநா அமைப்பின் விருது தமிழக சுகாதாரத் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மக்களை தேடி மருத்துவம்‘ திட்டத்தை செயல்படுத்தியதற்காக கடந்த மாதம் 25-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நகரில் நடைபெற்ற 79-ஆவது ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்றா நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால், கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் பயனாளிகளின் இல்லங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை தமிழகம் முழுவதும் 1,80,00,844 பயனாளிகள் முதல்முறை சேவைகளையும், 3,96,66,994 நபா்கள் தொடா் சேவைகளையும் பெற்று வருகின்றனா். சா்வதேச அளவில் வழங்கப்பட்டுள்ள பெருமைமிகு இவ்விருது தமிழக அரசுக்கு மேன்மேலும் சிறப்புற செயல்படுவதற்கான புதிய உத்வேகத்தையும், அடுத்தகட்ட உயா்நிலையை அடைவதற்கான உந்துதலையும் அளித்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் அவா் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் வாழ்த்து

ஐ.நா. விருது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: இந்திய துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக, நமது அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் தேடிவந்துள்ளது. 1.80 கோடிக்கும் அதிகமான மக்கள் இதுவரை இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனா். ஒவ்வொருவா் இல்லத்துக்கும் சென்று மருத்துவ சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்த விருது.

சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி, கண்காணித்து மேம்படுத்தி வரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கும், அவருக்கு துணை நிற்கும் துறை செயலா், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத்துறை பணியாளா்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024