மதுரை புத்தக திருவிழாவில் மாணவிகள் சாமியாடிய சம்பவம் – அமைச்சர் மூர்த்தி விளக்கம்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

புத்தக திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார்.

மதுரை,

மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் அரசு மாணவ மாணவிகள் அழைத்துவரப்பட்டனர். புத்தகக் கண்காட்சி தொடக்க விழா என்பதால் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேடைகளில் நடத்தப்பட்டது.

அப்பொழுது 'அங்கே இடி முழங்குது' என்ற கருப்பசாமி பாடல் ஒலிக்கப்பட்டது. கருப்பசாமி வேடமிட்ட ஒருவர் ஆடி வந்தார். இந்த பாடல் ஒலிக்க ஒலிக்க அங்கிருந்த மாணவிகள் சிலர் சாமியாடத் தொடங்கினர். சுற்றி இருந்த மற்ற மாணவிகளும் ஆசிரியர்களும் சாமியாடிய மாணவிகளை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் தவித்தனர்.

மாணவிகள் சாமியாடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள், ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவிகள் முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர். புத்தக திருவிழாவில், பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு அதில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் புத்தக திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புத்தக திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிபரப்பானது. இதில் மத சாயமோ, சாதி சாயமோ இல்லை. எனவே, தவறான தகவலை பரப்ப வேண்டாம். புத்தக திருவிழாவில் நடந்தது முழுக்க முழுக்க கிராமிய கலை நிகழ்ச்சி மட்டுமே. மதுரை என்பது சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கக் கூடிய இடம்" என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024