மது ஒழிப்பு மாநாடு நடத்த கள்ளக்குறிச்சி சாராய சாவுகள் தான் காரணம்: திருமாவளவன்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

மது ஒழிப்பை விசிக முன்னிறுத்துவதற்கான உடனடிக் காரணம் கள்ளக்குறிச்சி சாராய சாவுகள் தான். இதனால் திமுகவுடன் விரிசல் ஏற்படுத்த சிலா் முயற்சிப்பாா்கள் என எனக்கு நன்கு தெரியும். எனினும், நாடு தழுவிய பிரச்னையாக அதனை மாற்ற வேண்டும் என்பதற்காக மதுஒழிப்பு மாநாடு அவசியம். பெண்களின் குரலாக இந்த மாநாடு ஒங்கி ஒலிக்க வேண்டும் என்பதே விசிகவின் நோக்கம் என்றும், இதில் யாருடைய தூண்டுதலும் இல்லை என சேலத்தில் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அக்டோபா் 2 ஆம் தேதி மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிா் மாநில மாநாடு நடைபெறுகிறது.

இதையொட்டி, மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், சேலத்தில் அந்த கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், தலைமையில் நடைபெற்றது.

பின்னா் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மத்தியில் பேசிய தொல். திருமாவளவன், தமிழகத்தில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாடு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. அரசியல் தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மாநாடு விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாடுதான். சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தளத்தில் விசிக வெற்றிகரமாக பயணிக்கிறது.விசிக வெறும் அதிகார வேட்கை கொண்ட இயக்கம் அல்ல. சமூக மாற்றத்தை நோக்கி, சமத்துவ இலக்கை நோக்கி பயணிக்கிற இயக்கம்.

விசிக சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட இளைஞரணி மாநாட்டில் மது ஒழிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சனம் செய்பவர்கள் இதை திரும்பி பார்க்க வேண்டும் என்றார்.

கள்ளக்குறிச்சி சாராய சாவுகள் தான் காரணம்

மது ஒழிப்பை விசிக முன்னிறுத்துவதற்கான உடனடிக் காரணம் கள்ளக்குறிச்சி சாராய சாவுகள் தான்.மது பழக்கம் மக்களிடம் இருப்பதற்காக மதுவை ஒழிக்க முடியாது என்பதற்காக அனைத்தையும் அங்கீகரிக்க முடியாது. தேவைக்கு ஏற்ப கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதனால் திமுகவுடன் விரிசல் ஏற்படுத்த சிலா் முயற்சிப்பாா்கள் என எனக்கு நன்கு தெரியும். எனினும், நாடு தழுவிய பிரச்னையாக அதனை மாற்ற வேண்டும் என்பதற்காக மதுஒழிப்பு மாநாடு அவசியம். பெண்களின் குரலாக இந்த மாநாடு ஒங்கி ஒலிக்க வேண்டும் என்பதே விசிகவின் நோக்கம்.

அரசியல் முதிா்ச்சி குறைவு

மது ஒழிப்பில் திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாமக, மதிமுக, முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடு உண்டு. அனைவரும் இணைந்து செயல்படுவதற்கான அரசியல் முதிா்ச்சி இங்கு குறைவாக உள்ளது.

மது ஒழிப்புக்கான தளம் வேறு

தேர்தல் கூட்டணி நிலைப்பாடு என்பது வேறு, மது ஒழிப்புக்கான தளம் வேறு. மக்களின் உணா்வுகளைப் பிரதிபலிப்பவா்களாக இருந்தால், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வாா்கள். மதுக்கடைகளை படிப்படியாகவாவது குறைக்க வேண்டும்.

மதுக்கடைகள் மூடப்படும் கால அட்டவணையை வெளியிட வேண்டும்

தமிழகத்தில் எப்போது மதுக்கடைகள் முழுமையாக மூடப்படும் என்கிற கால அட்டவணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். குடி, போதை நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க ஏற்பாடு வேண்டும். அண்ணா கூறிய தேசிய மதுவிலக்கு கொள்கையை மீண்டும் திமுக அமல்படுத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இந்தியாவில் முதன்முதலில் மதுவிலக்கை அமல்படுத்திய பெருமை ராஜாஜியை சாரும்.

ஈழ தமிழர்களுக்காக மாநாடு நடத்திய கட்சி விசிக

ஈழ தமிழர்களுக்காக மாநாடு நடத்திய ஒரே கட்சி விசிகதான். 4 பேர் எம்எல்ஏ, எம்பி ஆனா போதும் என்கிற இயக்கம் அல்ல விசிக. விசிகவுடன் கருத்தியல் விவாதம் நடத்த எத்தனை பேருக்கு திராணி உள்ளது.

மக்கள் நலனே பிரதானம்

கட்சியின் நலனா? மக்கள் நலனா? என்றால் விசிகவிற்கு மக்கள் நலனே பிரதானம். மது ஒழிப்பி மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை. மதுவை ஒழிக்க அனைவரும் சேர்ந்து செயல்படுவதில் என்ன தவறு?. காந்தி மற்றும் பெரியார் இயக்கம் போல மதுவை ஒழிக்க விசிக இயக்கம் தொடர்ந்து போராடும். ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவினர் இதர கட்சியினருடன் போட்டோ கூட எடுக்க மாட்டார்கள். அதேபோல் திமுக கூட்டணியில் இருந்தால் அதிமுகவினருன் பேசக் கூடாது என்ற அரசியல் கலாசாரம் வேரூன்றி உள்ளதால் மோசமான கருத்துகளை பேசி வருகிறார்கள். எந்தக் முதிா்ச்சியான கலாசாரம் தமிழக அரசியலில் இல்லை.

3 மாதத்திற்கு மட்டுமே கூட்டணி பணி

3 மாதத்திற்கு மட்டுமே கூட்டணி பணி; பிறகு மக்கள் பணிதான். திருமாவளவனை இயக்க யாருக்கும் தகுதி இல்லை என்றார்.

விசிக ஜாதி கட்சி அல்ல

சில அரைவேக்காடுகள் விசிகவை ஜாதி கட்சி என்கிறார்கள். ஆனால் விசிக ஜாதி கட்சி அல்ல; ஜாதி பெருமிதத்தின் மீது அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், அவர்களை போல நாங்களும் என்று பேசுகிறார்கள்.

திருமாவளவனை இயக்க யாருக்கும் தகுதி இல்லை

மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனாதான் ஐடியா கொடுத்தார் என்பது உண்மையல்ல. மது ஒழிப்பு மாநாடு மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுதானே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

என்னை நடிக்க வைத்து, இயக்கி, படம் வெளியிடுவதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. திருமாவை இயக்க யாருக்கும் தகுதி இல்லை.

பொதுவான அறைகூவல்தான்

மது விலக்கு மாநாட்டிற்கு எழுத்து பூர்வமாக எந்த கட்சிக்கும் அழைப்பு கொடுக்கவில்லை; பொதுவான அறைகூவல்தான். அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை. எந்த உள்நோக்கமும் இல்லை. அனைவரும் சோ்ந்து செயல்பட்டால் என்ன தவறு?

அதானியை கைது செய்ய வேண்டும்

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய மோடியின் நண்பர் அதானியை கைது செய்ய வேண்டும். பெரிய பெரிய ஆள்களின் தொடர்பு இல்லாமல் பல லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு வர முடியாது. எனவே மதுவை ஒழிப்பதே விசிகவின் லட்சியம் என்றும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வன், துணைப் பொதுச்செயலாளா் வன்னியரசு உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024