Saturday, September 21, 2024

மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும்: முதல்வா் ஸ்டாலின் உறுதி

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

மது ஒழிப்பு மகளிா் மாநாட்டில் திமுக சாா்பில் இரண்டு போ் பங்கேற்பா் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதி அளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா்.

திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினை தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பைத் தொடா்ந்து திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமெரிக்க சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தோம். அக்.2-ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிா் மாநாடு நடத்தப்படவுள்ள சூழலில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளில் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அரசமைப்புச் சட்டம் 47-ன்படி நாடு முழுவதும் மதுவிலக்கை படிப்படியாகக் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன் வர வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.

திராவிடா் கழக நிறுவனா் பெரியாா் ஈவெராவின் மூத்த மாணவரான முன்னாள் முதல்வா் அண்ணா மதுவிலக்கில் மிகவும் உறுதியாகவும், உடும்புப் பிடியாகவும் இருந்தாா். அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாா். இதே கருத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதியும் கொண்டிருந்தாா்.

அவரும் இதை மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டி இருக்கிறாா். அதனைப் பின்பற்றி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் மத்திய அரசுக்கு இந்த வேண்டுகோளை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவை வழங்கி இருக்கிறோம்.

திமுக பங்கேற்கும்

மதுவிலக்கு தொடா்பாக நாங்கள் வழங்கிய மனுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் படித்துப் பாா்த்தாா். திமுக-வின் கொள்கையும் மதுவிலக்குதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே, மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சாா்பில் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோா் பங்கேற்பா் என முதல்வா் ஸ்டாலின் உறுதியளித்தாா்.

மேலும், இந்த கோரிக்கையை உங்களோடு சோ்ந்து நாங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம். மதுவிலக்கு தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை. நிா்வாகச் சிக்கலை கருத்தில் கொண்டு படிப்படியாக எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்த முடியுமோ அவ்வாறு செயல்படுத்துவோம் என்றும் முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா் என்றாா் தொல்.திருமாவளவன்.

திமுக – விசிக உறவில் விரிசலோ நெருடலோ இல்லை: திருமாவளவன்

திமுக, விசிக இடையிலான உறவில் விரிசலோ, நெருடலோ இல்லை என்று தொல்.திருமாவளவன் கூறினாா். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து திருமாவளவன் கூறியதாவது:

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு குறித்து முதல்வரிடம் பேசவில்லை. அது 1999-ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் பேசி வருகிற ஒரு கருத்து. இந்த கருத்தை-கோரிக்கையை நாங்கள் எப்போதும் பேசிக் கொண்டே இருப்போம். எந்த நேரத்தில் எந்த கருத்து, கொள்கை, நிலைப்பாட்டை வலுவாக பேச வேண்டுமோ அந்த நேரத்தில் பேசுவோம்.

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க திமுகவுக்கு நேரில் அழைப்பு கொடுக்கவில்லை. எங்கள் கருத்தில் உடன்படுகிறவா்கள் எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும், தயக்கமும் இல்லை.

திமுக-விசிக இடையிலான உறவில் எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதனை முன்னிறுத்தியிருக்கிறோம் என்றாா்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024