Saturday, September 21, 2024

மத்திய நிதியமைச்சரின் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

சென்னை: ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கை வைத்த அன்னபூர்ணா உரிமையாளரை மத்திய நிதியமைச்சர் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அமெரிக்க அரசுமுறைப் பயணம் தொழில்துறையில் புதிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அமெரிக்காவிற்குச் சென்று அரசு முறைப் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். இது வெற்றிகரமான பயணமாகவும், சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்திருந்தது. தனிப்பட்ட எனக்கு அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனைப் பயணமாக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது.

உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய தொழில்களை தொடங்குவதற்கு தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 28 ஆம் தேதி அமெரிக்கா சென்றேன். செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அங்கே இருந்திருந்தேன். இந்த 14 நாட்களும் மிகப் பெரிய பயனுள்ளதாக இந்தப் பயணம் அமைந்தது.

உலகின் புகழ் பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பை நடத்தியிருக்கிறேன். இதில் 19 நிறுவனங்களுடனா சந்திப்புகளின் போது, 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ரூ. 7,616 கோடி முதலீடு

சான் பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக 7 ஆயிரத்து 616 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த முதலீடுகள், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.

கடந்த 29.8.2024 அன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றார்கள்.

தமிழ்நாடு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்களை கேட்டுக் கொண்டேன்.

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு உற்பத்தி

இன்னும் பல நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல, தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு, தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், எங்களது வேண்டுகோளை ஏற்று, சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை துவக்க முன்வந்துள்ளது.

அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசும்போது, அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், கமிட்டி அமைத்து, உறுப்பினர்களுடன் பேசிவிட்டு அதற்குப் பிறகு சொல்கிறோம் என்று சொன்னார்கள்.

அதற்குப் பிறகு நாங்கள் எங்களுடைய விருப்பத்தை அதிகமாக தெரிவித்த காரணத்தினால் அனைத்து வசதிகளும் உங்களுக்கு செய்து கொடுக்கிறோம் என்ற அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, சரி நீங்கள் செல்லுங்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதற்கான மகிழ்ச்சியான செய்தியை நிச்சயம் அனுப்புகிறோம் என்று சொன்னார்கள்.

நாங்கள் சிகாகோ விமான நிலையத்தில் விமானத்தில் உட்கார்ந்த பிறகு அறிவித்துவிட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. அந்த செய்தியை இன்றைக்கு உங்களுடன் நான் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்நாடு அரசு சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்கள் உற்பத்தியை துவங்குவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நான் ஆணையிட்டிருக்கிறேன்.

அதேபோல, எனது கனவு திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மேற்கொண்டு, அதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு, தொழில் நுட்பம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கும், வணிகம் புரிவதற்கும் உகந்த சூழ்நிலையை நிலவுவது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்பும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ட் 31 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவிலும், செப்டம்பர் 7 ஆம் தேதி சிகாகோ நகரிலும் நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இது தமிழ்நாட்டில் நான் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அமெரிக்க தமிழ் அமைப்புகள் அனைத்துக்கும் என்னுடைய நன்றிகள்.

ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அமெரிக்கா பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் !

அமெரிக்க பயணத்தின்போது எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டு இருக்கிறதா? குறிப்பாக ஆந்திரம், தெலங்கானா முதல்வர்கள் அமெரிக்க பயணத்தின்போது ரூ.25,000 கோடிக்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக ராமதாஸ் அறிக்கையில் குறைந்த அளவு முதலீடுகள் தான் இந்த அமெரிக்கா பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, அது எல்லாம் அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படக்கூடிய விஷயங்கள். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான முதலீடுகள் வந்திருக்கிறது. உறுதியோடு வரக்கூடிய முதலீடுகள் தான் வந்திருக்கிறது. அதில் எந்தவித சந்தேகப்படவேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக ஆட்சியில் 10% ஒப்பந்தங்கள் கூட நிறைவேறவில்லை

பின்னர் செய்தியாளர்கள், முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும், வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டு வருவது தொடர்பான கேள்விக்கு, அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே உங்களைச் சந்தித்த போது, தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாகச் சொல்லி இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், தொழில் துறை அமைச்சரும் அதுகுறித்து புள்ளிவிவரங்களோடு விளக்கியிருக்கிறார். சட்டப்பேரவையிலும் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதை குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி படித்துப் பார்த்து தெரிந்துகொண்டு சொல்லவேண்டும்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு போனதாகச் சொன்னார்கள். அதில் 10 விழுக்காடு ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதைச் சொன்னால் உள்ளபடியே அவருக்கு பெரிய அவமானமாக இருக்கும். அதனால் அதை தவிர்த்துவிடுகிறேன்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட ஒப்பந்தங்களில் பத்து சதவீதம் கூட நிறைவேறவில்லை.

நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது அரசியல் கலந்தபேசும்பொருளாகி இருப்பது குறித்த கேள்விக்கு,

திருமாவளவன் தெளிவாக, விளக்கமாக மது ஒழிப்பு மாநாடு அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் மாநாடு அல்ல, அதற்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் சொல்லியிருக்கிறார். அந்த விளக்கத்துக்கு மேல் பெரிய விளக்கம் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அன்னபூர்ணா விவகாரம் வெட்கப்பட வேண்டிய ஒன்று

கோவையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு கடினமாக இருக்கும் என்று பேசிய அன்னபூர்ணாவின் உரிமையாளர் அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜிஎஸ்டி குறித்த தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை அவர் முன் வைத்தார் என்பதற்காக அதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்டவிதம் என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்று. அதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

நீங்கள் எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும்

அமெரிக்கா பயணத்திற்கு முன்னதாக மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லியிருந்தீர்கள். மாற்றம் நிகழுமா? எதிர்பார்க்கலாமா? என அமைச்சரவை மாற்றத்திற்கான கேள்விக்கு, திமுக என்பது சொன்னதைத்தான் செய்யும். சொல்வதைத்தான் செய்வோம். ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன். இன்றைக்கு 75-ஆம் ஆண்டு கொண்டாடக்கூடிய வகையில் திமுக பவள விழா கொண்டாடப்பட இருக்கிறது. நிச்சயமாக, உறுதியாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன் என பதிலளித்தார்.

பிரதமரை நேரில் சந்திப்பேன்

தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நிதி வேண்டும் என்றால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மத்திய அமைச்சர் உங்கள் கோரிக்கைக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதைப்போல, மெட்ரோ ரயில் பிராஜக்ட் இரண்டிற்கு மத்திய அரசின் பங்களிப்பை இதுவரைக்கும் கொடுக்கவில்லை. நேற்று முன்தினம் கூட மத்திய நிதி அமைச்சர் நான் கடனுதவி பெற்றுக் கொடுத்தோம் என்று விளக்கியிருந்தார்கள். ஆனால், மத்திய அரசின் பங்களிப்பை கொடுக்கவில்லை. இந்த இரண்டு பெரும் நிதி தேவை என்று வலியுறுத்தி பிரதமரை நீங்கள் சந்தித்து வலியுறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக, உறுதியாக.. மெட்ரோ இரயில் திட்டத்திற்கும், பள்ளிக் கல்வித்துறையின் நிதிக்கு புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்வது குறித்தும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து பிரதமர் இடத்தில் உடனடியாக நேரம் கேட்டு, நானும் அதுகுறித்து வலியுறுத்த இருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024