மத்திய பொதுத் துறை நிறுவனத்தின் உதவியுடன் சென்னை ஐஐடி-யில் ரூ.16.5 கோடியில் நவீன உடற்கூறியல் ஆய்வகம்
சென்னை: மத்திய பொதுத் துறை நிறுவனத்தின் உதவியுடன் சென்னை ஐஐடி-யில் ரூ.16.5 கோடி செலவில் அதிநவீன உடற்கூறியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் (சிஎஸ்ஆர்) கீழ் சென்னை ஐஐடி-க்கு ரூ.16.5 கோடி வழங்கியது. இந்நிதியில் ஐஐடி மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் அதிநவீன உடற்கூறியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.
ஐஐடியில் பிஎஸ் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆய்வகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அதிநவீன ஆய்வகத்தை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி முன்னிலையில் பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பர்மிந்தர் சோப்ரா நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “நவீன மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கும், மருத்துவ சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பங்களை கண்டறியவும் இந்த ஆய்வகம் உதவும்'' என்றார்.
புதிய கண்டுபிடிப்புகள்: ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில், “மருத்துவ அறிவியலுடன் உயர் தொழில்நுட்பங்களை இணைத்து பயன்படுத்தும்போது, எதிர்கால மருத்துவத்துக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகள் தயாராகும் பிரத்யேக தளத்தை உருவாக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் (வணிகம்) மனோஜ் சர்மா, செயல் இயக்குநர் (சிஎஸ்ஆர்) அலி ஷா, ஐஐடி பேராசிரியர் கிருஷ்ணகுமார், மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் பேபி ஜார்ஜ், டீன் அஸ்வின் மகாலிங்கம், டீன் மகேஷ் பஞ்சானுல்லா, நிறுவன மேம்பாட்டு அலுவலக தலைமைச் செயல் அலுவலர் கவிராஜ் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.