மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி எம்.பி., திடீர் சந்திப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் முழு பட்ஜெட் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்திற்கு என சிறப்பு திட்டங்கள் எதுவுமில்லை, தமிழகத்தின் பெயர் கூட இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தூத்துக்குடியில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய கனிமொழி, தங்களுக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, தி.மு.க. எம்.பி., கனிமொழி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு பிரச்சினை தொடர்பாக இருவரும் விவாதித்தாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், தமிழகத்திற்கான கோரிக்கைகளையும் கனிமொழி முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், "இன்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். தமிழ்நாடு மற்றும் எனது தொகுதியான தூத்துக்குடி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்தும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும் கனிமொழி பேசினார். இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல தூத்துக்குடி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

Met the Hon'ble Union Finance minister @nsitharaman today and discussed various issues concerning the State of Tamil Nadu and my constituency Thoothukkudi. pic.twitter.com/BvIfHFMyag

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 6, 2024

You may also like

© RajTamil Network – 2024