Tuesday, October 22, 2024

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவர் குழு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது.

கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, உரிய நீதி வேண்டியும், குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படாததால், போராட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் நோக்கத்தில், இளநிலை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அக். 5ஆம் தேதிமுதல் நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 6 மருத்துவர்கள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவக் குழுக்கு முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று இளநிலை மருத்துவக் குழு பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மருத்துவர் குழு கோரிக்கைகள்

முந்தைய பேச்சுவார்த்தையில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அதனை மாநில அரசு நிறைவேற்றித்தர வேண்டும்.

பாலியல் தொல்லைகள் குறித்து பேச எங்கள் கல்லூரியில் முறையான நிர்வாக அமைப்பு இல்லை. எங்கள் கல்லூரி வளாகத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கும் ஒரு அமைப்பு கூட இல்லை. ஒரு சிறிய குழுவை அமைப்பதன் மூலம், குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் எழுப்புவதற்கான வாய்ப்புகளையாவது ஏற்படுத்தும்.

குரூப் டி பிரிவில் காலியாகவுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கான உள்கட்டமைப்புத் தேவைகளை மாநில பணிக் குழு நிறைவேற்றித்தரும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதனை இன்னும் செய்யவில்லை. மாநில பணிக்குழுவில் 5 – 7 மருத்துவர்கள் இடம்பெறுவார்கள் என முன்பு குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

மருத்துவ மாணவர் சங்கங்கள் மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளாக இருக்க வேண்டும். இந்த சங்கத்தில் தேர்வு செய்யப்படும் பிரதிநிதி, மேற்கூறிய குழுக்களில் இடம்பெற வேண்டும்.

மருத்துவ நிறுவனங்களில் முறைகேடான பல ஆவணங்களைக் காண நேர்ந்தது. இவற்றிற்கு ஒப்புதல் அளித்தவர் மாநில சுகாதாரத் துறை செயலாளர். இது, மாநில சுகாதாரத் துறை மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், சுகாதாரத் துறை செயலாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

மருத்துவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்படும் குழுக்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முழுக்க மருத்துவர்களுக்கே இருக்க வேண்டும்.

பல்வேறு கமிட்டிகளில் இடம்பெற்றிருந்ததால், சந்தீப் கோஷ் போன்றவர்கள் தோராயமாகத் தேர்வு செய்யும் முறையை நாங்கள் விருப்பவில்லை.

மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. மருத்துவர்கள் பாதுகாப்பாக உணரும் சூழல் மருத்துவமனையில் இல்லை. இது நோயாளிக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சேவையை மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது.

இதையும் படிக்க | லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! – ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

முதல்வர் பதில்கள்

மருத்துவர்கள் கோரிக்கைக்கு பதிலளித்த முதல்வர் மமதா பானர்ஜி, மருத்துவத் தேர்வு முறைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் உத்தரவிடுகிறேன்.

மருத்துவமனைகளில் மிரட்டல் கலாசாரம் இருக்கக் கூடாது. நான் ஒருவரை மிரட்டுவதால், எனக்கு அடுத்து இருப்பவர் தனக்கு கீழே இருப்பவரை மிரட்டுவார். மிரட்டல் கலாசாரம் எந்த வகையிலும் அனுமதிக்கப்படாதது. யாரும் யாரையும் மிரட்டி எந்தவொரு காரியத்தையும் நிறைவேற்ற முடியாது.

மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப உத்தரவிடுகிறேன். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உங்களுக்கு பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் மூலம் உச்சநீதிமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்புமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதனால், உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்.

நானும் பலமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளேன். ஒருமுறை 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் யாரும் என்னை வந்து சந்தித்து என் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. ஆனால், நான் உங்களுக்காக வந்துள்ளேன். ஜனநாயக முறைப்படி நீங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தீர்கள். அது உங்கள் உரிமை. அதனை நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள். உங்கள் நலன் குறித்து ஒவ்வொரு மணிநேரமும் நான் கேட்டறிந்தேன். உங்கள் கோரிக்கைகள் என்ன என்பதை ஒருமுறையல்ல, பல முறை கேட்க முன்வந்துள்ளேன். உங்களுக்கு எதிர்காலம் உள்ளது. கடமை உள்ளது. போராட்டத்தையும் உண்ணாவிரதத்தையும் விரைவில் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் குறிப்பிட்டார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024