Sunday, September 22, 2024

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் மீது குவியும் புகார்கள்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் மீது குவியும் புகார்கள்

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஏற்பாடு செய்த சிறப்பு முகாமில் தேவநாதன் யாதவ் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை வைத்திருந்தனர். பெரும்பாலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியோர் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிக அளவில் இங்கே முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தின் நிரந்த வைப்பு நிதியாக ரூ.525 கோடியும், 300 கிலோ தங்கமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தில் ரூ.24.5 கோடி மோசடி நடந்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரையும் கடந்த மாதம் போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த சுதிர் சங்கர் (46) என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தினமும் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். எனவே, பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக பெரும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.

2 நாட்களாக நடைபெற்று வரும் அந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் நிதி நிறுவனத்தில் கட்டிய ஆவணங்கள், ரசீது உள்ளிட்டவற்றின் நகலை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது வரை 3,814 புகார்கள் வந்துள்தளாகவும், இதுவரை ரூ.300 கோடி அளவுக்கு தேவநாதன் யாதவ் மோசடி செய்ததாக கூறி புகார்கள் வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024