துலே,
மராட்டியத்தின் துலே மாவட்டத்தில் சமர்த் காலனிக்கு உட்பட்ட, பிரமோத் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் மன்சிங் ஜிராஸ். வேளாண் உர விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவருடைய மனைவி கீதா பிரவீன் ஜிராஸ். ஆசிரியை.
இவர்களுக்கு மித்தேஷ் பிரவீன் ஜிராஸ் மற்றும் சொஹாம் பிரவீன் ஜிராஸ் என 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக இவர்களுடைய வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை.
இவர்களின் வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர், 2 முறை வந்து விட்டு திரும்பி சென்றிருக்கிறார். 4 நாட்களாக எந்த சத்தமும் இல்லாத நிலையில், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பிரவீனின் சகோதரியிடம் தகவல் தெரிவித்தனர்.
அவர் நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பிரவீன் தூக்கு போட்டபடி காணப்பட்டார். அவருடைய மனைவி, மகன்கள் விஷம் குடித்து, உயிரிழந்து காணப்பட்டனர். உடனடியாக தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களுக்கு வசதியில் குறைவு இல்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் ஏன் மரணம் அடைந்தனர் என்பது உடனடியாக தெரிய வரவில்லை. கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிப்பவர்களிடையே சோகம் ஏற்படுத்தி உள்ளது.