மராட்டியத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மராட்டியத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மராட்டியத்தில் மொத்தம் 9 கோடி 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், 5 கோடியே 22 ஆயிரத்து 739 பேர் ஆண்கள், 4 கோடியே 69 லட்சத்து 96 ஆயிரத்து 279 பேர் பெண்கள், 6 ஆயிரத்து 101 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.