Tuesday, October 1, 2024

மராட்டியம்: பாலியல் வன்கொடுமையை கண்டித்து போராட்டம் – போலீசார் தடியடி

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்திற்குட்பட்ட பத்லாப்பூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்று மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் கழிப்பறை செல்லும்போது அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற, அதே பள்ளியில் பணிபுரியும் நபர் சிறுமிகளிடம் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து பள்ளி மாணவ, மாணவர்களின் பெற்றோர்கள், மக்கள் உள்ளிட்ட பலர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பள்ளி வளாகங்கள் சூறையாடப்பட்டன.

இதேபோன்று பத்லாபூரில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்களை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் மறியல் போராட்டத்தால், மும்பை மாநகரின் மத்திய வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்கள் பத்லாபூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

ரெயில் நிலையத்தில் பதற்றம் நிலவியதால், பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஒருகட்டத்திற்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, பள்ளியின் முதல்வரை நேற்று (ஆக. 19) பணியிடைநீக்கம் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி அலுவலக உதவியாளர் போக்சோ சட்டத்தில் கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை விசாரிக்கும் பணியில் தவறியதாகக் கூறி, மூன்று போலீஸ் அதிகாரிகளை மராட்டிய அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024