Thursday, November 7, 2024

மராட்டிய சட்டசபை தேர்தல்: டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மராட்டிய டி.ஜி.பி.யை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

தேர்தலில் பா.ஜனதா – காங்கிரஸ், சிவசேனா – உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகள் நேரடியாக மோதும் தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. மகாயுதி கூட்டணியில் பா.ஜனதாவும், மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரசும் அதிக தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அந்தவகையில் மொத்தம் உள்ள 288 இடங்களில் இந்த 2 கட்சிகளும் 74 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

இந்நிலையில் மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து அம்மாநில டி.ஜி.பி. ரஷ்மி சுக்லாவை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் அம்மாநில அரசுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், டி.ஜி.பி.யை நியமனம் செய்ய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை நாளை பிற்பகலுக்குள் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டம் ஒன்றில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் (சி.இ.சி.) ராஜீவ் குமார், அதிகாரிகள் பாரபட்சமற்றவர்களாகவும், நியாயமாகவும் நடந்துகொள்வது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது கட்சி சார்பற்றவர்களாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

முன்னதாக காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாகவும், எதிர்கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டுவருவதாகவும் ரேஷ்மி சுக்லா மீது காங்கிரஸ்கட்சி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024