Friday, November 8, 2024

மராட்டிய மாநிலத்தில் பரவும் ‘ஜிகா’ வைரஸ் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இதுவரை 8 பேருக்கு 'ஜிகா'வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளது.

'ஜிகா' வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணி பெண்கள் தொற்றுநோய் பரிசோதனை மற்றும் கரு வளர்ச்சியை கண்காணிப்பதில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'ஏடிஸ்' கொசு மூலம் 'ஜிகா' வைரஸ் பரவல் ஏற்படுகிறது. இது அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கக் கூடும் என்பதால் அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

'ஏடிஸ்' கொசுப்புழு உற்பத்தி ஆகாத வகையில் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரிக்க வேண்டும் எனவும், குடியிருப்பு பகுதிகள், பணியிடங்கள், கட்டுமான தளங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, கண் இமைகளில் வீக்கம், தசை மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட அறிகுறிகள் 2 முதல் 7 நாட்கள் வரை இருந்தால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 'ஜிகா' வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும், மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024