மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: 9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஜரங்கே

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அடுத்தடுத்த உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.

அவரது கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டின் துவக்கத்தில் மராட்டிய மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும், ஓ.பி.சி. பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜரங்கே மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதம் 17 நாட்கள் நீடித்தது.

அதன்பின்னர், இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஜரங்கே தனது சொந்த ஊரான அந்தர்வாலி சராதி கிராமத்தில் கடந்த 17-ம் தேதி மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் மருத்துவ சிகிச்சை பெறாமலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று 8-வது நாளின்போது அவரால் எழுந்து அமர முடியாத அளவுக்கு மிகவும் சோர்வடைந்தார்.

மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும், இதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை வலியுறுத்தினர். எனினும் அவர் தனது போராட்டத்தில் உறுதியாக இருந்தார். அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு மருத்துவக் குழு அங்கு தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில், 9-வது நாளான இன்று, ஜரங்கே தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

பின்னர் ஆதரவாளர்களிடையே பேசிய அவர், மராத்தா சமூகத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டும், சமூக உறுப்பினர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்ததாலும் உண்ணாவிரதத்தை முடித்துகொள்வதாக கூறினார்.

மராத்தா சமூகத்தை புண்படுத்துவதற்கு காரணமானவர்கள் தப்ப மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், மராத்தா சமூகத்தினர் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாய குன்பி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆவணம் இருந்தால், அந்த நபரின் ரத்த சொந்தங்கள் அனைவருக்கும் குன்பி சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. குன்பி மக்களை மராத்தா சமூகத்தினரின் ரத்த உறவுகள் என்று அங்கீகரிக்கும் வரைவு அறிவிப்பை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜரங்கே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024