மருத்துவமனை கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த டீன்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் குற்றச்சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கல்லூரிகளின் டீன்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி அறிவுறுத்தியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், இந்த விவகாரம் தொடர்பான சில முக்கிய வழிகாட்டுதல்களை சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுடன் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி தலைமையில் ஆன்லைனில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
காவல் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், உயர் மின் விளக்குகளை பொருத்த வேண்டும் என்று அப்போது சங்குமணி அறிவுறுத்தினார்.