Monday, September 23, 2024

மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்த மமதா!

by rajtamil
Published: Updated: 0 comment 21 views
A+A-
Reset

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் இளநிலை மருத்துவர்கள் தலைமைச் செயலகத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.

கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

தொடரும் மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தௌக் கண்டித்து இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மாதமாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநிலத்தில் மருத்துவ சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என முதல்வர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவர்கள், பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் போராட்டத்தை முடித்துக்கொண்டு மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற உத்தரவிட்டிருந்தது. எனினும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மேற்கு வங்க மாநிலத்தில், மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மருத்துவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் ஆலோசனையில் ஈடுபட தலைமைச் செயலகத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்து பிரதிநிதிகள் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்க சுகாதாரத் துறை செயலாளர் என்.எஸ். நிகாம், இது தொடர்பாக மருத்துவர்களுக்கு மின்னஞ்சலும் அனுப்பியுள்ளார். உங்களில் முக்கியப் பிரதிநிதிகள் (அதிகபட்சம் 10 நபர்கள்) அடங்கிய குழு தலைமைச் செயலகத்திற்கு வரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மருத்துவர் கொலை: நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! -மருத்துவர்கள்

தலைமைச் செயலகத்தில் உள்ள அறையில் மருத்துவர்களின் வருகைக்காக முதல்வர் மமதா காத்துக்கொண்டிருப்பதாக மாநில எம்.எல்.ஏ. சந்திரிமா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அரசிடமிருந்து எந்தவித அழைப்பும் மின்னஞ்சலும் வரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024