Sunday, September 22, 2024

மலைப் பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டுமானம்: ரூ. 1 கோடி வரை அபராதம்!

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவுகளின் எதிரொலியாக, கோவாவில் மலைப் பிரதேசங்களில் விதிகளை மீறியும், உரிய அனுமதியின்றியும் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட அம்மாநில அரசு முனைப்பு காட்டியுள்ளது.

இது குறித்து, கோவா அரசின் நகர்ப்புறத் திட்டமிடல் துறை அமைச்சர் விஷ்வஜித் ராணே திங்கள்கிழமை(ஆக. 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், மலைப் பகுதிகளில் மரங்களை வெட்டி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கடந்த 6 மாதங்களாக அரசு தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவா தலைநகர் பனாஜி அருகேயுள்ள ரெய்ஸ் மாகோஸ் பகுதியில், மலைப் பகுதிகளில் தனியார் கட்டுமான பெருநிறுவனம் ஒன்று, விதிகளை மீறி கட்டடங்களை எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான அனுமதியை அரசு வழங்கியதாக விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தான் சார்ந்த துறையால் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில் விதிகளை மீறி காடுகளை அழித்தல் உள்பட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோருக்கு தண்டனையாக அபராதத் தொகையை கணிசமாக உயர்த்தவும் கோவா அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, விதிமீறல் செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு ரூ. 1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்க அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் புதிதாக விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளதாகவும், அதன்படி, மலைப் பிரதேசங்களில் காடுகளை அழித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு பொறியாளர்களிடமிருந்து அப்பகுதியின் மண் உறுதித்தன்மை குறித்த அறிக்கைகளைப் பெற்ற பின்பே கட்டுமானத்திற்கு அனுமதி வழங்க அவற்றில் வழிவகை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவுறுத்தலின்படி, உள்ளூர் அதிகாரிகள் இதுபோன்ற விதிமீறல் கட்டுமானப் பணிகளைக் கண்காணித்து, அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024