Friday, September 20, 2024

மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய ‘கெடு’ தனியார் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியது

by rajtamil
0 comment 35 views
A+A-
Reset

மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை ‘கெடு’ விதித்து தனியார் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியது.

அம்பை,

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து தேயிலை தோட்டங்களை பி.பி.டி.சி. நிறுவனம் 99 வருட குத்தகைக்கு எடுத்து இருந்தது. அங்கு ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைகிறது. எனவே, ஒப்பந்தத்தை முடித்து கொள்ளும் வகையில், அந்த நிறுவனம் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது தொடர்பாக ஏற்கனவே 3 நோட்டீஸ்களை வழங்கியது. தற்போது பி.பி.டி.சி. நிறுவனம் 4-வது நோட்டீஸை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

பி.பி.டி.சி. நிறுவனம் தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு குறித்து கடந்த 30-ந்தேதி அறிவித்தது. விருப்ப ஓய்வு திட்டத்தின்படி, தொழிலாளர்கள் விண்ணப்பம் செய்வதற்கான விண்ணப்பத்தை நிறுவனம் வழங்கி கொண்டிருக்கிறது. அதனை தொழிலாளர்கள் பெற்று சமர்ப்பிப்பதற்கு நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் தீர்வு ஒப்பந்தத்தின்படி, இறுதி நாள் 15.6.2024 என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இறுதிநாள் என்பது விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த தொழிலாளர்கள் (தீர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி) தங்களது பணியில் இருந்து ஓய்வுபெறுகின்ற நாளையும், மற்றும் அன்றைய நாளில் பி.பி.டி.சி. நிர்வாகத்தின் தொழிலாளர்கள் என்பதில் இருந்து விடுவிக்கப்படுவது ஆகும்.

சட்டப்படியிலான அனைத்து தொகைகளும் (தற்போதைய தொகைகள்) தீர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி விருப்ப ஓய்வு விண்ணப்பம் செய்தவர்களின் கணக்கில் பி.பி.டி.சி. நிறுவன விருப்ப ஓய்வை ஏற்றுக்கொண்ட கடிதம் வழங்கிய பின்பு 25 சதவீதம் கருணைத்தொகையுடன் வரவு வைக்கப்படும். 25 சதவீத கருணைத்தொகையானது விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்கள் தீர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்னரே வழங்கப்படும்.

விருப்ப ஓய்வு விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் வசம் உள்ள நிர்வாகத்தின் அனைத்து உடைமைகளையும் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்கள் தங்களது குடியிருப்புக்காக வழங்கப்பட்ட தொழிலாளர் வீடுகளை காலி செய்து இறுதி நாளின் 45 நாட்களுக்குள் அல்லது வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந்தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.அவ்வாறு தங்களது வீடுகளை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 75 சதவீத கருணைத் தொகையானது விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டு அதன்படி முழு மற்றும் இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பம் பெறப்படும்'இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் எவ்வளவு சீக்கிரம் வெளியேறுகிறார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டு, அவர்களை விரைவாக தேயிலைத்தோட்ட பகுதியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் பி.பி.டி.சி. நிர்வாகம் இறங்கி இருப்பதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.

You may also like

© RajTamil Network – 2024