மாயாவதி குறித்து சர்ச்சையாக பேசிய பாஜக எம்.எல்.ஏ. மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் – அகிலேஷ் யாதவ்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவதிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் சவுத்ரி மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மதுரா மாவட்டத்தின் மந்த் பகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் சவுத்ரி ஒரு வீடியோவில், மாயாவதி நான்கு முறை உ.பி.யில் முதல்-மந்திரியாக இருந்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் தான் (பாஜக) முதல் முறையாக அந்த தவறை செய்தோம். உத்தரபிரதேசத்தில் மாயாவதி தான் ஊழல் மிகுந்த முதல்-மந்திரி என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சவுத்ரியின் இந்த கருத்துக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யாதவ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் வேறுபாடுகளுக்கு இடம் உண்டு, ஆனால் ஒரு பெண்ணாக மாயாவதியின் கண்ணியத்தை கெடுக்க யாருக்கும் உரிமை இல்லை. பாஜக உறுப்பினர்கள் அவரை முதல்-மந்திரியாக்கியது தவறு, இது ஒரு ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் கருத்தை அவமதிக்கும் செயலாகும்.

மேலும் அவர் மிகவும் ஊழல் நிறைந்த முதல்-மந்திரி என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பகிரங்க அறிக்கைக்காக சவுத்ரி மீது அவதூறு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர் கூறிய மரியாதையற்ற கருத்துக்கள் பெண்கள் மீது குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் மீது பாஜக உறுப்பினர்கள் கொண்டிருக்கும் ஆழமான கசப்பை பிரதிபலிக்கிறது. அத்தகையவர்கள் மீது பாஜக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த கட்சியினரின் பார்வை என்று கருதப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024