Saturday, September 21, 2024

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.12,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் முதலானவர்களை ஆதிக்கவாதிகளிடமிருந்து காக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகளை வழங்கி முன்னேறுவதற்கு வித்திட்ட சமூக நீதிக் காவலர் என்பது உலகறிந்த உண்மையாகும்.

அப்பெருமகனார் உடல்உறுப்புகளும் மனவளர்ச்சியும் குன்றிய நிலையில் வாழ்ந்தவர்களுக்குப் புத்துணர்வும் புது வாழ்வும் அளிப்பதற்காக ஊனமுற்றவர் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என அவர்களுக்குப் பெயர் தந்து அவர்கள் நலன்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின்கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என 27.3.2010 அன்று தனியே ஒரு துறையை புதிதாக ஏற்படுத்தி, அதன்மூலம் பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி எண்ணற்ற சலுகைகளை வழங்கி அவர்கள் வாழ்விலும் வளம் சேர்த்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1.500ஆகவும் உயர்த்தி வழங்கினார். அத்துடன், தற்போது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ -மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி அவர்கள் ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார்.

அதாவது. பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவியர்களில் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 2,000 ரூபாய் என்றும்; 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ -மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாய் என்றும்;

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். அதேபோல, கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் என்பதை 12 ஆயிரம் ரூபாய் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

மேலும் தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 7 ஆயிரம் ரூபாய் என்பதை 14 ஆயிரம் ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

இப்படி, மாற்றுத் திறனாளிகள் உள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் ஏக்க உணர்வுகளைத் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவிவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி ஊக்கத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்து4.7.2023அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி படிப்புகளுடன், மாற்றுத் திறனாளி மாணவியர்கள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்னும் விழைவோடு ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஊக்கமளிப்பதற்காக அவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் திட்டத்தின்கீழ் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 50 மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் 50 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10.9.2024 அன்று ஆணையிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள இந்த ஆணைகளின் பயனாக தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர் வாழ்வில் ஊக்கம் பெருகும். ஆக்கம் சேரும். உற்சாகம் பொங்கும். அறிவொளி பரவும் அவர்கள் வாழ்க்கை சிறக்கும் என்பது உறுதியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024