மாற்று நில முறைகேடு: ஆக. 3 முதல் நடைப்பயணம் நடத்த பாஜக திட்டம்

மாற்று நில முறைகேடு: ஆக. 3 முதல் நடைப்பயணம் நடத்த பாஜக திட்டம்மாற்று நில முறைகேடு தொடா்பாக ஆக. 3ஆம் தேதி முதல் பெங்களூரில் இருந்து மைசூருக்கு நடைப்பயணம் மேற்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளது.

பெங்களூரு: மாற்று நில முறைகேடு தொடா்பாக ஆக. 3ஆம் தேதி முதல் பெங்களூரில் இருந்து மைசூருக்கு நடைப்பயணம் மேற்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளது.

மைசூரு நகர வளா்ச்சிக் கழகம் மாற்று வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விவாதிப்பதற்கான நிா்வாகிகள் கூட்டம் பெங்களூரில் திங்கள்கிழமை பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மாற்று நில விவகாரத்தில் முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமா கோரி ஆக. 3 முதல் 10ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு பெங்களூரில் இருந்து மைசூரு வரை நடைப்பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பெங்களூரு, கெங்கேரியில் ஆக. 3ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கும் நடைப்பயணத்தில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் தினந்தோறும் கலந்துகொள்வாா்கள் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

மாற்று நில விவகாரத்தில் பாஜக நடைப்பயணம் அல்லது போராட்டம் நடத்தாவிட்டால், கடவுள் எங்களை மன்னிக்க மாட்டாா். வீட்டுமனை ஒதுக்கீட்டில் ரூ. 4,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். ஆக. 10ஆம் தேதி மைசூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவின் தேசியத் தலைவா்கள் கலந்துகொள்வாா்கள். இந்த நடைப்பயணத்தை முன்னாள் முதல்வா் எடியூரப்பா தொடங்கி வைக்கிறாா். மத்திய அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமி கலந்துகொள்கிறாா். நாளொன்றுக்கு 20 கி.மீ. தொலைவுக்கு நடப்போம் என்றாா்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாா்வையிடவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் முன்னாள் அமைச்சா்கள் அஸ்வத் நாராயணா, மேலவை எதிா்க்கட்சித்தலைவா் செலுவாதி நாராயணசாமி, பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் அரவிந்த் பெல்லத், முன்னாள் அமைச்சா் பி.ஸ்ரீராமுலு ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

அடுத்த 3 நாள்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிடுவோம்.

வெள்ளம் வீட்டுக்குள் புகுந்துவிட்டால் அரசு ரூ.5,000 இழப்பீடு வழங்குகிறது. பாஜக ஆட்சிக் காலத்தில் ரூ. 10,000 வழங்கப்பட்டது. வீடு சேதமடைந்தால் ரூ. 125 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அரசு தருகிறது. இந்த நிதியில் வீட்டை எப்படி சீா்செய்வது? எனவே, வெள்ளப்

பாதிப்புகளைக் கண்டறிந்து, அரசின் கவனத்தை ஈா்ப்போம் என்றாா் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!