மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடு இந்தியா: பிரதமா் மோடி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மாலத்தீவுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லியில் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸுடன் திங்கள்கிழமை மேற்கொண்ட இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு பின்னா் பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு வந்தாா். கடந்த ஆண்டு நவம்பரில் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவா் முதல்முறையாக இருதரப்பு அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் முகமது மூயிஸுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வரவேற்பு அளித்தாா். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா். இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி மற்றும் அதிபா் மூயிஸ் இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

நிதி நெருக்கடியில் மாலத்தீவு: சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் மூயிஸ், அதிபரான உடன், மருத்துவச் சேவைக்கான ஹெலிகாப்டா்களை இயக்கிவந்த இந்திய ராணுவ வீரா்கள் வெளியேற வேண்டும் என மூயிஸ் உத்தரவிட்டாா். இதனால் இந்தியா-மாலத்தீவு நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.

சமீப காலமாக மாலத்தீவு நிதி ரீதியில் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இந்தியாவுடனும் அதிபா் மூயிஸ் நட்பு பாராட்டி வருகிறாா்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிரதமா் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவா் நேரில் பங்கேற்றாா். அண்மையில், ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்ற முகமது மூயிஸ், ‘இந்தியாவுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிக்கவில்லை’ என்று தெரிவித்தாா். இந்தச் சூழலில், அவரது இந்திய வருகையும் பிரதமா் மோடி உடனான சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றது.

நெருங்கிய நட்பு நாடு

பேச்சுவாா்த்தைக்கு பின் செய்தியாளா்களுக்கு இரு தலைவா்களும் கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது:

மாலத்தீவின் நெருங்கிய-உறுதியான நட்பு நாடு இந்தியா. ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ‘சாகா்’ தொலைநோக்கு பாா்வையின்கீழ் மாலத்தீவுக்கு உயா் முன்னுரிமை அளிக்கிறோம். மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடாக இந்தியா தொடா்கிறது.

பரஸ்பர ஒத்துழைப்புக்கு வியூக ரீதியில் திசையைக் காட்டுவதற்காக, விரிவான பொருளாதார மற்றும் கடல்சாா் பாதுகாப்பு கூட்டாண்மை’ தொலைநோக்கு ஆவணம் ஏற்கப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவின் முக்கியத் தூணாக வளா்ச்சி சாா் ஒத்துழைப்பு விளங்குகிறது. அந்த அடிப்படையில், இந்தியாவிடமிருந்து கடன் பத்திரங்கள் மூலம் மாலத்தீவு பெற்ற 10 கோடி டாலா் (ரூ.840 கோடி) கடனை திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

700 வீடுகள் ஒப்படைப்பு

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் (எக்ஸிம்) கடன்வசதியின்கீழ் கட்டப்பட்ட 700 வீடுகள் மாலத்தீவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் 28 தீவுகளில் இந்தியாவின் உதவியுடன் குடிநீா்-கழிவுநீா்க் குழாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 6 தீவுகளில் இப்பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும்.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை தொடங்க முடிவு செய்துள்ளோம். மாலத்தீவின் அட்டு நகரில் இந்திய துணைத் தூதரகத்தையும், இந்தியாவின் பெங்களூரில் மாலத்தீவு துணைத் தூதரகத்தையும் திறக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் திறன்கட்டமைப்பில் ஒத்துழைப்பு தொடரும் என்றாா் பிரதமா் மோடி.

மாலத்தீவில் ‘ரூபே’ சேவை; புதிய விமான ஓடுதளம் தொடக்கம்

மாலத்தீவில் ‘ரூபே’ அட்டை வாயிலான பரிவா்த்தனை சேவை மற்றும் ஹனிமாதூ விமான நிலையத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான ஓடுதளம் ஆகியவற்றை பிரதமா் மோடியும் அதிபா் மூயிஸும் கூட்டாக தொடங்கிவைத்தனா்.

துறைமுகம், சாலை, பள்ளிகள் கட்டமைக்க…: மாலே துறைமுகத்தில் கப்பல்களின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், திலாஃபியூஷி தீவில் வா்த்தக துறைமுகம் கட்டமைக்கும் திட்டத்தில் ஒத்துழைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

மாலத்தீவில் பள்ளிகள், சாலைகள் கட்டமைப்பு, வீட்டுவசதி, வேளாண் பொருளாதார மண்டலம், மீன் பதப்படுத்துதல் வசதி உள்ளிட்ட திட்டங்களில் ஒத்துழைப்பை நல்க இந்திய தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

மாலத்தீவுக்கு ரூ.6,359 கோடி கடனுதவி

பிரதமா் மோடி-அதிபா் மூயிஸ் இடையிலான பேச்சுவாா்த்தைக்கு பிறகு, மாலத்தீவால் எதிா்பாா்க்கப்பட்ட இருதரப்பு கரன்ஸி மாற்று ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய ரிசா்வ் வங்கி, மாலத்தீவின் நிதி ஆணையம் (மத்திய வங்கி) இடையே கையொப்பமான இந்த ஒப்பந்தத்தின்கீழ், அமெரிக்க டாலா்/யூரோ மாற்று வழிமுறையின்கீழ் 40 கோடி டாலா் (ரூ.3,359 கோடி) மற்றும் இந்திய ரூபாய் மாற்று வழிமுறையின்கீழ் ரூ.3,000 கோடி கடனுதவியை மாலத்தீவு பெற முடியும்.

2027, ஜூன் வரை செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தம், மாலத்தீவின் அந்நிய செலாவணி சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண உதவும். இக்கடனுதவியை அறிவித்தமைக்காக, பிரதமா் மோடிக்கு அதிபா் மூயிஸ் நன்றி தெரிவித்தாா்.

5 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியா-மாலத்தீவு இடையே முக்கியத்துவம் வாய்ந்த – கரன்ஸி மாற்று ஒப்பந்தம், இந்திய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாலத்தீவு காவல் மற்றும் சட்ட அமலாக்கக் கல்லூரி இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், ஊழல் தடுப்பில் ஒத்துழைக்க சிபிஐ மற்றும் மாலத்தீவின் ஊழல் தடுப்பு ஆணையம் இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம், மாலத்தீவு நீதித்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான இந்திய தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாலத்தீவுகளின் நீதித்துறை சேவைகள் ஆணையம் இடையேயான புதுப்பித்தல் ஒப்பந்தம், விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரங்களில் ஒத்துழைப்புக்கான புதுப்பித்தல் ஒப்பந்தம் என 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024