மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைவர் தகவல்

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைவர் தகவல்

சென்னை: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என தமிழக அரசு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார். சென்னை தொழில் வர்த்தக சபையின் (எம்சிசிஐ) 188-வது ஆண்டுபொதுக் கூட்டம் சென்னையில்நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான வி.விஷ்ணு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 20 சதவீதம் உற்பத்தி துறையிடம் இருந்து கிடைக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிக அதிகளவாக 39,500 தொழிற்சாலைகள் உள்ளன.

தமிழகம் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடுவதில்லை. மாறாக, பிற நாடுகளின் பிராந்திய பொருளாதாரத்துடன் போட்டியிடுகிறது. தமிழகத்தின் மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 8 மாவட்டங்கள் 50சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

எந்த நாட்டிலும் நடந்ததில்லை: டாடா மோட்டார்ஸ் மற்றும் வின்பாஸ்ட் என்ற 2 சர்வதேச நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் உற்பத்தி மையத்தை தமிழகத்தில் நிறுவ குறுகிய காலத்தில் அறிவிப்பு வெளியிட்டன. உலகில் எந்த நாட்டிலும் இவ்வளவு குறுகிய நாட்களில், 2 சர்வதேச நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மையத்தை ஒரே மாநிலத்தில் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டதில்லை. இதன் மூலம் தமிழக அரசு மீது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

மின்னணு துறை இன்றைக்கு அதிகளவு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 1.26 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 9.5பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன்மூலம், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

விஷ்ணு

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் தமிழகத்துக்கு 17 முதல் 19 கிகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. கடற்கரையில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிப்பதற்கு தூத்துக்குடி கடற்கரை மற்றும் குஜராத் மாநிலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், எதிர்காலத்தில் 30 முதல் 32 கிகாவாட் அளவுக்கு காற்றாலை மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு விஷ்ணு கூறினார்.

இக்கூட்டத்தில், சென்னை தொழில் வர்த்தக சபையின் தலைவர் டி.ஆர்.கேசவன், டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் இயக்குநர் லஷ்மி வேணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, கூட்டத்தில் 2024-26-ம் ஆண்டுக்கான புதிய தலைவராக கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராம்குமார் சங்கரும், துணைத் தலைவராக டெல்பி டிவிஎஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஏ.விஸ்வநாதனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நேற்றிரவு… ஹிமான்ஷி குரானா!

சொல்லாமல் கொல்லாமல் உள்ளங்கள் பந்தாடுதே… சிவாங்கி வர்மா!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்