Saturday, September 21, 2024

மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் போராட்ட வழக்கு: காலியிடங்கள் விரைவில் நிரப்ப தமிழக அரசு உறுதி – வேலைநிறுத்தம் நிறுத்திவைப்பு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் போராட்ட வழக்கு: காலியிடங்கள் விரைவில் நிரப்ப தமிழக அரசு உறுதி – வேலைநிறுத்தம் நிறுத்திவைப்பு

சென்னை: தமிழக மின்வாரியத்தில் உள்ள 39 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, இன்றுமுதல்நடைபெறுவதாக இருந்த கேங்மேன்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

கேங்மேன்களுக்கு திறன்மிகு பணிகளை ஒதுக்காமல் உரிய திறன் பயிற்சி வழங்கி களப்பணியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் காலியாக உள்ள 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதன்தொடர்ச்சியாக மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் கேங்மேன் தொழிற்சங்கத்தினர் இன்று (ஆக.22) முதல் தொடர்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதற்கு தடை கோரி பொன்னேரியைச் சேர்ந்த ஆர்.புருஷோத்தமன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.மனோகரன் ஆஜராகி, கேங்மேன்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரினார்.

கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன், தமிழகம் முழுவதும் மின் வாரியத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்மேன் உள்ளிட்ட பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாக உள்ளது.

இதனால் மின் கம்பங்களில் ஏறி, மின் விநியோகம் தொடர்பான பணிகளில் சிறிதும் அனுபவமில்லாத கேங்மேன்களை அந்த வேலைகளை செய்ய அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்வதால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே கேங்மேன்களுக்கு பயிற்சி வழங்கி அந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும். அல்லது காலிப்பணியிடங்களை தமிழக அரசே டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்ப வேண்டும் என வாதிட்டார்.

அப்போது மின்வாரியம் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மின்வாரிய வழக்கறிஞர் டி.ஆர்.அருண்குமார் ஆகியோர், மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல கேங்மேன்களின் தொழில் ரீதியிலான பிரச்சினைகளுக்கு சமரச பேச்சுவா்ர்த்தையின் மூலம் தீர்வு காணப்படும். தகுதியற்ற பணிகள் கேங்மேன்களுக்கு வழங்கப்படாது என உறுதியளித்தனர். அப்போது, வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கேங்மேன்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து தமிழக அரசுதரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024