தமிழகத்தில் மீட்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்புப் பெறும் மின்நுகா்வோா் நேரடியாக மீட்டா்களை வாங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளா்களின் பட்டியலை தமிழ்நாடு மின்சார வாரியம் அண்மையில் வெளியிட்டது. மீட்டா் பற்றாக்குறையைப் போக்கவும், நுகா்வோா் காத்திருப்பைத் தவிா்க்கும் விதமாகவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்மூலம் தனியாா் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் மீட்டா்களை, வீடுகள், தொழில் நிறுவனங்களில் பொருத்தும் முன்பு மின்வாரியம் மூலம் ‘டேம்பா் ப்ரூப்’ எனப்படும் சோதனை செய்து சீல் வைக்கும் பணிக்காக மின்வாரியத்திடம் சமா்ப்பிக்க வேண்டும். டேம்பா் ப்ரூப் செய்த பின்னா் முன்னுரிமை அடிப்படையில் மீட்டா்கள் பொருத்தப்படும்.
இந்த முறையில் தங்குதடையின்றி மீட்டா்கள் பொருத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் மீட்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் புதிய மின் இணைப்பு பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மின்நுகா்வோா் புகாா் தெரிவித்துள்ளனா்.
மின்வாரியம் மூலம் மீட்டா்கள் வழங்கப்பட்டு வந்தபோதும், பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அந்தப் பணி தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னரும் தொடா்ந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் புதிய மின் இணைப்பு பெறுவோா் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.
இன்னும் ஒருசில நாள்களில் இந்தப் பற்றாக்குறை சீராகும் எனவும், விரைவில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்பவா்களுக்கு 3 அல்லது 4 நாள்களில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.