Monday, September 23, 2024

மீனவர்கள் கைது: கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்திடவும், கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, கடந்த 7-09-2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், IND-TN-08-MM-198, IND-TN-08-MM-28 மற்றும் IND-TN-08-MM-52 பதிவெண்கள் கொண்ட அவர்களது மூன்று மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

2024-ம் ஆண்டில் மட்டும் (7-09-2024 வரை) 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவே மிக அதிகமானதென்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை நீதிமன்றங்கள் மீனவர்களின் சக்திக்கு மீறிய அபராதங்களை விதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் அங்கு சிறையில் இருக்கும் காலத்தை நீட்டிக்க வழி செய்வதோடு, ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவக் குடும்பங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பிற்கும் வழி வகுக்குமென்று தனது முந்தைய கடிதத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளதை நினைவு கூர்ந்துள்ளார்.

எனவே, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்திடவும், கூட்டுப்பணிக்குழு கூட்டத்தைக் விரைந்து நடத்திடவும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024