மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனையாக இருந்தாலும்; மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாக இருந்தாலும், அவற்றைத் தீர்த்து வைப்பதில் மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் இருந்து பருவலை மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும், அவர்களுடைய விசைப் படகுகளையும் 5.8.2024 அன்று, எல்லை தாண்டியதாக குற்றம் சுமத்தி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தி.மு.க. அரசுக்கும், தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் உரிய தீர்வு காணப்படவில்லை.

கடந்த 3.9.2024 அன்று இலங்கை நீதிமன்றம் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளதோடு, எஞ்சியுள்ள 10 மீனவர்களை விடுவிக்கக் கோருவதற்கான தீர்ப்பு 10.9.2024 அன்று வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க மத்திய அரசையும், தி.மு.க. அரசையும் வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிணைந்து 9.9.2024 அன்று நடத்த இருக்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் C. ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான S.P. சண்முகநாதன், கழக வர்த்தக அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024