“மீனவர் பிரச்சினைக்கு முடிவு காண தொடர்ந்து முயற்சிக்கிறோம்” – பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
ராமநாதபுரம்: தியாகிகளை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அனைவருக்கும் வணக்கம். இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்றையதினம் நான் மரியாதை செலுத்தியிருக்கிறேன்.
இந்த நேரத்திலே அண்ணாவும், கலைஞரும் தேவர் பற்றி பெருமைப்படுத்தி குறிப்பிட்டுச் சொன்னதை நான் சொல்ல விரும்புகிறேன்.
“அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் போன்று, கம்பீரமாகக் காட்சி அளித்தார் தேவர்"-என்று அண்ணா அவரைப் பாராட்டியிருக்கிறார்.
“வீரராக பிறந்தார்; வீரராக வாழ்ந்தார்; வீரராக மறைந்தார்; மறைவுக்குப் பிறகும் வீரராக போற்றப்படுகிறார்”-என்று கலைஞர் அவரைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். அத்தகைய தியாகியை போற்றும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
பசும்பொன்தேவர் அவர்களை போற்றி கழக அரசு செய்திருக்கக்கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை நான் உங்களிடத்தில் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன்.
➢ மதுரை மாநகரில் மாபெரும் வெண்கலச் சிலை
➢ பசும்பொன் மண்ணில் நினைவில்லம்
➢ மேல்நீலிதநல்லூர் – கமுதி – உசிலம்பட்டி ஆகிய இடங்களில் மூன்று அரசு கலைக் கல்லூரிகள்
➢ மதுரை ஆண்டாள்புரத்தில், "முத்துராமலிங்கத் தேவர் பாலம்"-என்று பெயரிட்டோம்
➢ காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை
➢ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு ஒதுக்கீடு.
➢ கடந்த 2007-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவை மிக எழுச்சியோடு நாம் கொண்டாடியிருக்கிறோம்.
➢ அப்போது, தேவர் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விழாவை அடையாளம் காட்டக்கூடிய வகையில் வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது. அணையா விளக்கும் நாம் அமைத்திருக்கிறோம். நூலகக் கட்டடம் – பால்குடங்கள் வைப்பதற்கு மண்டபம் – முளைப்பாரி மண்டபம் என்று பசும்பொன்தேவர் புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.
இப்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குருபூஜை நடத்தியிருக்கிறோம். பசும்பொன்னில் இருக்கும் அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது.
நேற்று முன்தினம் கூட, பசும்பொன் தேவரின் பிறந்தாள் விழாவின்போது ஏற்படுகின்ற கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், மழை – வெயிலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் 1 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்ட உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை திறந்து வைத்திருக்கிறோம்.
இதுபோன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரைப் போற்றும் செயல்களையும் – திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்!
எனவே அவரது புகழ் வாழ்க! வாழ்க! என்று இந்த நேரத்தில் குறிப்பிட்டு கூறிக்கொள்கிறேன்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார்.
கேள்வி – பிஜேபி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. மீனவர்களின் கைது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அது பற்றி.
முதல்வர் பதில்: தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் பேசியிருக்கிறேன். வெளியுறவுத் துறை அமைச்சரிடத்திலும் இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறோம். அவர்களும் அவ்வப்போது, நாங்கள் எழுதக்கூடிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும், இது தொடர்ந்து இருந்துவருகிறது. இதற்கு முடிவு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதில் எந்தவிதமான கருத்து மாறுபாடும் கிடையாது.
கேள்வி: தேவர் கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக..
முதல்வர்: அதற்கு தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இப்போது கூட 12 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம். உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.
கேள்வி: காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது . அதுபற்றி..
முதல்வர்: 2008 ஆம் ஆண்டு தான் காவிரி குண்டாறு திட்டத்தின் முதற்கட்டப் பணி கதவனையிலிருந்து துவக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டு காலம் அதை கிடப்பில் போட்டுவைத்திருந்தார்கள். கடைசி வருடத்தில் தான் அதை செய்யப்போகிறோம் எனும் அறிவிப்பை வெளியிட்டு தொடர்ந்தார்கள். அதையும் கோவிட் பெருந்தொற்று வந்த காரணத்தினால் கிடப்பில் போடப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது 40 சதவிகிதம் வரை நிலஎடுப்பு பணிகள் முடிந்திருக்கிறது. தொடர்ந்து அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இவ்வாறு முதல்வர் கூறினார்.