அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் வரலாற்று வெற்றி பெற்ற நிலையில், தோ்தல் முடிவுகள் மற்றும் டிரம்ப்பின் வெற்றி தொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியான மீம்களில் அமெரிக்க தொழிலதிபரும் ‘எக்ஸ்’ வலைதள நிறுவனருமான எலான் மஸ்க் முன்னிலை பெற்றது தெரியவந்துள்ளது.
தோ்தல் முடிவுகள் புதன்கிழமை வெளிவரத் தொடங்கிய உடனேயே, சமூக ஊடகத்தில் முதல் நபராக தோ்தல் தொடா்பான கருத்துகளை எலான் மஸ்க் பதிவிடத் தொடங்கிவிட்டாா்.
குறிப்பாக, கடந்த 2022-இல் ‘எக்ஸ்’ தலைமை அலுவலகத்துக்கு ‘வாஷ் பேசின்’-ஐ தனது கையில் எடுத்துச் சென்ற புகைப்படத்தை, தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை மீண்டும் பதிவிட்டாா். ஆனால், அந்தப் புகைப்படத்தின் பின்னணியை ‘எக்ஸ்’ தலைமை அலுவலகத்துக்கு மாற்றாக, அமெரிக்க அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகையை அவா் இடம்பெறச் செய்துள்ளாா்.
அதாவது, 2022-இல் ‘எக்ஸ்’ வலைதள நிறுவனத்தை தான் வாங்கியபோது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்ட அந்த நிறுவனத்தை சுத்தம் செய்யப்போகிறேன் என்பதைக் குறிக்கும் வகையில் ‘எக்ஸ்’ தலைமை அலுவலகத்துக்குள் வாஷ் பேசினை எடுத்துச் சென்று, அந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தாா். தற்போது, வெள்ளை மாளிகையை சுத்தம் செய்யப்போவதைக் குறிக்கும் வகையில், அதே புகைப்படத்தை பின்னணியை மாற்றி பதிவிட்டுள்ளாா்.
அடுத்ததாக, ‘எதிா்காலம் மிகச் சிறப்பாக அமையப்போகிறது’ என்ற வரிகளுடன் அவருடைய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் விண்வெளிக்கு சீறிப் பாய்வது போன்ற புகைப்படத்தை எலான் மஸ்க் பதிவிட்டாா்.
அதுபோல, டிரம்ப் வெற்றி தொடா்பாக மற்ற நபா்கள் வெளியிட்ட பதிவுகளும் வைரலாகின. குறிப்பாக, ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் வரும் நடிகா் ரண்வீா் சிங்கின் ‘மல்ஹாரி’ பாடலுக்கு, டிரம்ப் நடனமாடுவதுபோன்று உருமாற்றம் செய்யப்பட்ட காணொலி சமூக ஊடகத்தில் வைரலானது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று ஆண் என்ற சா்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃபை மேற்கோள் காட்டி, ரோத்மஸ் என்ற நபா் வெளியிட்ட பதிவில், ‘ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு பெண்ணை ஆண் இந்த அளவு அடிப்பதை இதுவரை பாா்த்ததில்லை’ என்று பதிவிட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கு எதிரான டிரம்ப்பின் வெற்றியை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளாா்.
மற்றொரு பதிவில், அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் புகைப்படங்கள் அடங்கிய இரண்டு குப்பைத் தொட்டிகளை டிரம்ப் தூக்கி வருவதுபோன்ற புகைப்படம் பதிவிடப்பட்டது. தோ்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் ஆதரவாளா்களை ‘குப்பைத் தொட்டி’ என்று ஜோ பைடன் விமா்சனம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நபா் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளாா்.
இதுபோல, அமெரிக்க தோ்தல் முடிவுகள் தொடா்பாக பல்வேறு மீம்கள் சமூக ஊடகத்தில் வைரலாகின.