Friday, October 11, 2024

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: 10 தங்கப்பதக்கம் வென்று சென்னை மாவட்டம் முதலிடம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: 10 தங்கப்பதக்கம் வென்று சென்னை மாவட்டம் முதலிடம்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் 10 தங்கப் பதக்கம் உட்பட மொத்தம் 27 பதக்கங்களை வென்று சென்னை மாவட்டம் முதலிடம் பிடித்தது.

இதுகுறித்து நேற்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2024 மாவட்ட அளவிலான போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம்10-ம் தேதி சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிவைத்தார்.

மாவட்ட, மண்டல அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என மொத்தம் 11 லட்சத்து 56 ஆயிரத்து 566 பேர் 36 வகையான விளையாட்டுப் போட்டிகளில், 168 பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் அக்.4-ம் தேதிமுதல் 24 வரைமாவட்ட, மண்டல அளவில் வெற்றிபெற்ற 33 ஆயிரம் நபர்கள் பங்குபெறும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை -2024 போட்டிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது. மாநில அளவிலான போட்டிகளில் நேற்று (அக்.10) பதக்கம் பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கையுந்துப் பந்து பள்ளி மாணவிகள் பிரிவில் சேலம் மாவட்டம் தங்கம், சென்னை மாவட்டம் வெள்ளி, ஈரோடு மாவட்டம் வெண்கலப் பதக்கம் பெற்றன. கையுந்துப் பந்து பள்ளி மாணவர் பிரிவில் கோவை மாவட்டம் தங்கம், சென்னை மாவட்டம் வெள்ளி,தூத்துக்குடி மாவட்டம் வெண்கலப் பதக்கம் பெற்றன.

ஜிம்னாஸ்டிக்ஸ் (டேபிள் வாலட்) பள்ளி மாணவியர் பிரிவில் சென்னை மாவட்டம் தியா ஹரிபிரகாஷ் தங்கம், கே.ஆதிரை வெள்ளி, செங்கல்பட்டு மாவட்டம் ஏ.வி.அஸ்வித்ரா வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

ஜிம்னாஸ்டிக்ஸ் (புளோர் எக்சசைஸ்) பள்ளி மாணவர் பிரிவில் ஈரோடு மாவட்டம் கே.சந்தானம் தங்கம், சென்னை மாவட்டம் ஆர்.ஹரிபிரசன்னா வெள்ளி,எஸ்.சஞ்சய் ராம் வெண்கலப் பதக்கம் வென்றனர். ஜிம்னாஸ்டிக்ஸ் (அன்ஈவன் பார்ஸ்) பள்ளிமாணவியர் பிரிவில் ஈரோடு மாவட்டம் டி.ராகவி தங்கம், சென்னை மாவட்டம் வி.அனுஷிவானி வெள்ளி, ஈரோடு மாவட்டம், ஆர்.சஞ்சனா வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ஜிம்னாஸ்டிக்ஸ் (ஸ்டீல் ரிங்க்ஸ்) பள்ளி மாணவர் பிரிவில் சேலம் மாவட்டம் எம். ஜஸ்வின் தங்கம், மதுரை மாவட்டம் எம்.எம்.ஆதித்யா சர்வேஷ் வெள்ளி, ஈரோடு மாவட்டம் வி.ஜீவன் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் 10 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 27 பதக்கங்கள் பெற்று முதலிடம் பெற்றது. ஈரோடு மாவட்டம் 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்தது. செங்கல்பட்டு மாவட்டம் 6 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்கள் பெற்று மூன்றாமிடம் வந்தது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024