முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு; அதிமுக எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு; அதிமுக எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

சென்னை: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதற்காக முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இனி இப்படி பேசமாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டதிருத்தம், வெளி மாநில தொழிலாளர்களின் வெளியேற்றம், மதுபான புழக்கம் போன்றவற்றை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அப்போது தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வரை நேரடியாக விமர்சித்தும், அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.பி.-யுமான சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசு சார்பில் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சி.வி.சண்முகம் மீதான இரு வழக்குகளை மட்டும் ரத்து செய்தது. இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்தது. இதை எதிர்த்து சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுதன்சு துலியா, அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுதமிழக அரசு தரப்பில், பொதுவெளியில் ஒரு மாநிலத்தின் முதல்வரை, மனுதாரர் தனது இஷ்டம்போல அவதூறாக பேசியிருப்பது அரசியல் சாசன சட்ட விதிகளுக்கு எதிரானது மட்டுமின்றி அநாகரீகமானது. எனவே இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்யக் கூடாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகளாக பதவி வகிப்பவர்கள் பொது இடங்களில் பேசும்போது தங்களது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். எம்.பி.யாக பதவி வகிக்கும் சி.வி.சண்முகம் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். அவ்வாறு அவர் பேசியிருக்கக் கூடாது. அவர் தனது தவறை உணரவில்லை என்றால் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர்.

பி்ன்னர் இந்த விவகாரத்தில் அவர் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாதுஎன கேள்வி எழுப்பி, எதிர்காலத்தில் இனி இப்படி பேசமாட்டேன் என மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.15-க்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024